மாமன் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி இப்போது மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் நடிகர் சூரி பங்கேற்றார். அப்போது நடிகர் சூரி பேசியதாவது, என்னுடைய உண்மையான பெயர் ராம். என் தம்பி பெயர் லட்சுமணன். நான் கலெக்டராக இங்கு நிற்க வேண்டிய ஆள். லட்சுமணன் பொறியாளராக நிற்க வேண்டியவர்.
இருவரும் மதுரை செனாய் நகர் பள்ளியில் படித்தோம். 8ம் வகுப்பு தேர்ச்சியோடு பள்ளி படிப்பு முடிந்தது. பெரிய முதலாளியாக வரவேண்டும் என்று கூறி டீக்கடையில் அப்பா என்னை வேலைக்கு சேர்த்து விட்டார். பின்னர் சினிமா ஆசையில் சென்னைக்கு போனேன். 8 ஆண்டுகளாக பெயிண்டர் வேலை உட்பட கிடைத்த வேலை எல்லாம் செய்தேன். சென்னையில் பெரிய கட்டிடங்களில் எனது கை படாத இடமே இல்லை.
சினிமா வாய்ப்புக்காக போட்டோ எடுக்க கையில் 20 ரூபாய் கூட இருக்காது. சாப்பிட்டால் போட்டோ பிரிண்ட் போட முடியாது என்பதால் ஒரு டீ பன் என டீக்கடையில் அக்கவுண்ட் வைத்து சாப்பிட்டுதான் வாழ்க்கை ஓடியது. ஒரு வழியாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு டிரஸ் அளவெடுத்த போது கை கால் எல்லாம் நடுங்கி கண் கலங்கியது. ஷாட் எடுத்த பின்பு இன்னொருவர் அந்த கேரக்டருக்கு வாய்ப்பளித்தனர். உடனே சட்டையை கழட்டுங்கள் என்றனர்.
எல்லோருக்கும் நடப்பது போல எனக்கும் நடந்தது. அதன்பிறகு போராட்டம் தான். ஒரு பட வாய்ப்புக்காக வரிசையில் நின்ற போது மயங்கி விழுந்தேன். 2008ம் ஆண்டில் வெண்ணிலா கபடி குழு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அஜீத் குமார் உடன் ஜி படத்தில் சிறு வேடத்தில் நடித்தேன். ஒருமுறை சண்டைக் காட்சியில் எனது மண்டை உடைந்தது.
அப்போது அஜீத்குமார் பார்த்து பண்றது இல்லையா? எந்த ஊரு என்று கேட்டார். மதுரை என்றேன். அவர் மதுரைக்காரங்க மட்டும் ஏன் இவ்வளவு தீயா துரு துருனு இருக்காங்க. ஒண்ணு சொன்னா நாலு பண்றாங்க என்றார். இது எனக்கு நம்பிக்கை கொடுத்தது. வெண்ணிலா கபடி குழு படத்துக்கு பிறகுதான் என் வாழ்க்கை மாறியது. பல வலிகளை தாண்டியதால் தான் சூரியாக இன்று இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
வாழ்க்கையில் நிறைய அவமானங்கள் வரும். அதற்கு ரியாக்ட் பண்ணாதீர்கள். தோல்வி வரும். அடிபட்டு ஜெயிப்பவனிடம் இருக்கும் தெளிவு ஆசைப்பட்டு ஜெயித்தவனிடம் இருக்காது. விழுந்து எந்திரிக்கணும் என்று நினைக்கிறவனை கடவுள் நிச்சயமாக தூக்கி விடாமல் இருக்க மாட்டார். செல்போனை பார்த்து உறவுகளை விட்டு விடாதீர்கள். நான் இங்கு நிற்க முழு காரணம் குடும்பம் தான். குடும்பத்தை விடாதீர்கள் என்று நடிகர் சூரி இந்த விழாவில் பேசியிருக்கிறார்.





