தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தவர் லோகேஷ் கனகராஜ். கோவையைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் வங்கியில் பணிபுரிந்து வந்தார். சினிமா மீது கொண்ட ஆசையால் அந்த வேலையை துறந்த லோகேஷ் கனகராஜ், சென்னைக்கு பயணமானார்.
இதைத் தொடர்ந்து குறும்படங்களை இயக்கி வந்த அவருக்கு, பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் இயக்குனராகும் வாய்ப்பை கொடுத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட லோகேஷ், மாநகரம் திரைப்படத்தை எடுத்து பலரையும் மலைக்க வைத்தார். ஒரே நாளில் நடப்பது போன்று எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமாகவே இருந்தது.
இதன் பிறகு கார்த்தியுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ், கைதி என்னும் பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். அவரது முந்தைய திரைப்படமான மாநகரம் ஒரு நாளில் நடக்கிறது என்றால், கைதி திரைப்படம் ஒரே இரவில் நடப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டது. திரைக்கதையில் கொடுத்த விறுவிறுப்பால், வெள்ளித்திரையில் இன்னொரு மகுடமாக கைதி அமைந்தது.
இதன்பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்த அவர் மாஸ்டர் படத்தை இயக்கினார். கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த சமயத்தில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து விக்ரம் படத்தை நோக்கி லோகேஷ் கனகராஜ் இயக்கினார். பகத் பாசில் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை ருசித்தது.
அதில் லோகேஷ் கனகராஜ் அறிமுகப்படுத்திய என் சி யு கான்செப்ட் தமிழ் திரையுலகையை தாண்டி பலராலும் கவனிக்கப்பட, ரசிகர்களால் அவர் கொண்டாடப்பட்டார். விஜய் வைத்து லியோ திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.
லியோ படத்தில் நடித்திருந்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் இணையும் திரைப்படம் குறித்து சில வார்த்தைகள் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, எனக்கு ரஜினியின் 171 வது திரைப்படத்திற்கான கதை தெரியும். எங்கள் இயக்குனர் குழுவைச் சேர்ந்தவர்களுடன் லோகேஷ் கனகராஜ் இதன் கதையை விவரித்தார். அவர் வெறும் பத்து படங்கள் மட்டுமல்லாமல், 100 திரைப்படங்கள் இயக்குவார் என்று நம்புகிறேன் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.





