நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஒருவர் டைரக்ட் செய்ய இருப்பது இப்போது உறுதியாகி உள்ளது. நெல்சன் இயக்கத்தில் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்து வந்தது.
இதற்கிடையே ரஜினிகாந்த் பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். இதில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை பிடித்துப் போனதால் அவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியானது. ஆனால் சில சிக்கல்களும் இருந்தன.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் சார்பில் சிம்பு நடிக்க இருந்த படம் திடீரென டிராப் ஆகி விட்டது. அந்த படத்தின் கதையை தான் ரஜினிக்கு ஏற்ப மாத்தி ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க முடிவானது. ஆனால் அந்த கதையை ரஜினிக்கு விட்டுத்தர டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு விருப்பமில்லாததால் என்ஓசி தருவதில் தாமதம் ஏற்பட்டது.
மேலும் ரஜினியிடம் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனை கதை சொல்ல அந்த நிறுவனம் அனுப்பும்போதே ரஜினி அந்த கதையில் நடிக்க சம்மதித்தால் அந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவும் திட்டமிட்டு இருந்தது. ஆனால் கடைசியில் அதை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க முடிவானது. இது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தை மட்டுமின்றி இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டது.
இந்த சூழ்நிலையில் இப்போது ஓ மை கடவுளே டிராகன் போன்ற வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகி விட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது.
இந்த படத்தின் கதை குறித்த விவாதம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் – இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து சந்திப்பு இதுவரை 5 முறை நடந்துள்ளது. இறுதியாக நடந்த சந்திப்பின்போது அஸ்வத் மாரிமுத்து கூறிய கதை மிகவும் பிடித்து விட்டதால் உடனடியாக ரஜினிகாந்த் ஓகே சொல்லி இருக்கிறார். இதையடுத்து படத்தின் ப்ரீ புரெடக்சன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.





