நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் தலைவன் தலைவி. இந்த படத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை நித்யாமேனன் நடித்திருந்தார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ. 100 கோடியை கடந்தாண்டில் அள்ளிய தமிழ் படங்களில் ஒன்றாக இருந்தது.
தலைவன் தலைவி படத்தை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். ஏற்கனவே தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து முடித்து விட்டார்.
கடந்த 4 மாதங்களாக பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பிஸியாக இருந்த நடிகர் விஜய் சேதுபதி கமிட் ஆன படங்களில் நடிப்பது மட்டுமின்றி பிக்பாஸ் ஷோவிலும் சனி ஞாயிறு தினங்களுக்கான தொகுப்பாளர் பணியிலும் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே விஜய் தேவரகொண்டா இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாகவும் ஜெயிலர் 2 படத்திலும் வில்லனாகவும் அவர் நடித்திருக்கிறார்.
நடிகர் ரஜினி முத்து படத்தில் ஒரு பிச்சைக்காரர் போன்ற கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் அவரை சாமியார் என ஊர்மக்கள் அழைப்பார்கள். சில படங்களில் எம்ஜிஆரும் கூட பிச்சைக்கார வேடத்தில் வந்து வில்லன்களை ஏமாற்றுவது போல் நடித்திருப்பார். சுருளிராஜன் கவுண்டமணி செந்தில் என காமெடி நடிகர்கள் பலரும் பிச்சைக்கார வேடத்தில் நடித்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு படத்தின் ஹீரோவாக பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்து அசத்தியவர் நடிகர் விஜய் ஆண்டனி தான். தன் தாயின் உடல் நலம் சரியாக சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தில் அவர் பெரிய கோடீஸ்வரராக இருந்தும் பிச்சை எடுப்பார். அதன்பிறகு குபேரா படத்திலும் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருந்தார்.
இப்போது வெளியான லேட்டஸ்ட் தகவல்படி பூரி ஜெகநாதன் இயக்கிய படத்தில் விஜய் சேதுபதி பிச்சைக்காரன் கேரக்டரில்தான் நடித்திருக்கிறார். இதில் இந்தி நடிகை தபு மலையாள நடிகை சம்யுக்தா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதில் பிச்சைக்காரராக வரும் விஜய் சேதுபதி தபுவை காதலிப்பது போன்ற ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.





