தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டும் எப்போதுமே ரசிகர்களின் மத்தியில் பேசப்படும் சிறந்த படங்களாக இருக்கும். அதில் கமர்ஷியல் படங்களும் இருக்கும். காமெடி படங்களும் இருக்கின்றன. ஆனால் சில படங்கள் மட்டுமே திரில்லர் கதைக்களத்தில் இருந்தாலும் பெரிய அளவில் கவனத்தை பெற்று விடும்.
அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் மகாராஜா. இது நடிகர் விஜய் சேதுபதிக்கு அவர் நடித்த 50வது படமாகவும் இருந்தது. குரங்கு பொம்மை படத்தின் அபார வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா படமும் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் மிரட்டியிருந்தார். காமெடி நடிகர் சிங்கம்புலி இதில் வேறு ஒரு பரிமாணத்தில் தன் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். மேலும் அபிராமி நட்டி நடராஜ் அருள்தாஸ் முனீஸ்காந்த் நடிப்பு பெரிய அளவில் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
மகாராஜா படத்தை தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்க நித்திலன் சுவாமிநாதன் தயாரானார். இந்த படத்துக்கு மகாராணி என டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் இயக்குனர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பல மாதங்கள் கடந்த நிலையில் மகாராணி படம் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் இப்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா படத்தின் 2ம் பாகத்தை இயக்க நித்திலன் சுவாமிநாதன் தயாராகி விட்டார் என்றும் விஜய் சேதுபதியும் ஓகே சொல்லி விட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
மற்ற படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, ஸ்கிரிப்ட் பணியை முடித்துவிட்டு சொல்லுங்க, நேராக ஷூட்டிங் வந்து விடுகிறேன் என்று மக்கள் செல்வன் இயக்குனரிடம் கூறியிருக்கிறார். ஆனால் நடிகை நயன்தாரா நடிக்க வேண்டிய மகாராணி படம் என்னாச்சு? லேடி சூப்பர் ஸ்டார் நடிக்க இருந்த படம் இப்படி டிராப் ஆகி விட்டதே என்று அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.





