தமிழ் சினிமாவில் இது ரி ரிலீஸ் காலமாக உள்ளது. 20 ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மாஸ் ஹிட் ஆன பல படங்கள் தொடர்ந்து ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அஜீத்குமாரின் 50வது படம் மங்காத்தா வருகிற 23ம் தேதி வெளியாக உள்ளது. அதே போல் இப்போது அவரது 25வது வெள்ளி விழா படமும் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.
நடிகர் அஜீத்குமார் ஆரம்பத்தில் நடித்த படங்கள் எல்லாமே பெரும்பாலும் காதலை மையப்படுத்திய படங்களாக தான் இருந்தன. அந்த வகையில் கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான படம் அமர்க்களம். இது அவரது 25வது படமாகும். இந்த படத்தின் நாயகியாக நடித்த ஷாலினிக்கும் அஜீத்குமாருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அமர்க்களம் படம் அஜீத்குமாரின் திரை பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப் படமாக இருந்தது. இந்த படத்தை இயக்குனர் சரண் டைரக்ட் செய்திருந்தார். நாசர் ரகுவரன் அம்பிகா பூவிலங்கு மோகன் சார்லி தாமு வையாபுரி வினு சக்ரவர்த்தி என பலர் நடித்திருந்தனர். நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு பாடல் காட்சிக்கு நடனமாடி இந்த படத்தில்தான் அறிமுகமானார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்துள்ளார். அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களாக இருந்தன. குறிப்பாக இதில் சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை என்ற பாடலை படத்தின் நாயகி ஷாலினியே சொந்தக்குரலில் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமர்க்களம் படம் காதலை மையப்படுத்திய படமாகும். போலீஸ் அதிகாரிகள் குடும்பத்தை சேர்ந்த ஷாலினி, தியேட்டரில் ரவுடியாக வாழ்ந்து வரும் அஜீத்குமாரை காதலிப்பார். அதனால் பல பிரச்னைகள் ஏற்படும். கடைசியில் ஷாலினியே ஒரு பெரிய ரவுடியின் மகள்தான் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வரும். இதில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் பெரிய அளவில் அப்போது டிரண்டிங் ஆனது.
கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி நடிகை ஷாலினி பிறந்த நாளில் அமர்க்களம் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் வருகிற பிப்ரவரி 12ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. 4கே டிஜிட்டல் தொழில்நுட்ப தரத்தில் புதிய பொலிவுடன் அமர்க்களம் படம் திரைக்கு வருகிறது. மங்காத்தா படத்தை தொடர்ந்து அமர்க்களம் படமும் ரி ரிலீஸ் ஆவது அஜீத்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





