தமிழ் சினிமாவில் இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஏஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தார்.
ஏஆர் ரகுமான் தமிழ் படங்கள் மட்டுமன்றி இந்தியிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஏ ஆர் ரகுமான் கூறுகையில், பாலிவுட் சினிமா துறை மதவாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் குறைந்தது. வேலையை தேடி நான் செல்வதில்லை. வேலை என்னை தேடி வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது நேர்மையான பணியால் எனக்கு பலன் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று ஏஆர் ரகுமான் வெளிப்படையாக கூறியிருந்தார்.
அவரது வெளிப்படையாக இந்த கருத்து பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏஆர் ரகுமானின் இந்த கருத்துக்கு இந்தி திரைத்துறை சார்ந்த பலரும் எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் தனது வலைதள பக்கத்தில் ஏஆர் ரகுமான் வெளியிட்ட வீடியோவில் விளக்கம் தந்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, இசை எப்போதும் இந்திய பண்பாட்டுடன் இணைவதற்கும் அதை கொண்டாடுவதற்கும் மதிப்பதற்கான ஒரு வழியாகவே எனக்கு இருந்து வருகிறது.
இந்தியா தான் எனது ஊக்கம். என் ஆசான். என் வீடு. சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. ஆனால் இசையின் மூலம் முன்னேறுவது மரியாதை செலுத்துவதும் சேவை செய்வதுமே எப்போதும் என் நோக்கமாக இருந்து வந்துள்ளது. யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என் நேர்மையை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதுதான் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறது. பல்வேறு பண்பாடுகளின் குரல்களை கொண்டாட வைக்கிறது. ஜெய்ஹிந்த் ஜெய் ஹோ என்று அந்த வீடியோவில் ஏஆர் ரகுமான் பேசியிருக்கிறார். இதன் மூலம் தன்னைப் பற்றிய சர்ச்சையான கருத்துக்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.





