ஜெயிலர் படம் தந்த வெற்றியின் அனல் தகிப்பு இன்னும் குறையவில்லை. அதற்குள் ரஜினி 170 பட ஷூட்டிங் ஆரம்பித்து, மிக வேகமாக நடந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் துவங்கிய படப்பிடிப்பு, நாகர்கோவிலை அடுத்து இப்போது கன்னியாகுமரி – திருநெல்வேலிக்கு இடையில் பனங்குடி என்ற இடத்தில், நடந்து வருகிறது.
ரஜினி 170 படத்தின் இயக்குநர் தசெ ஞானேவல், ஏற்கனவே ஜெய்பீம் படம் மூலம் மிக பரபரப்பாக பேசப்பட்டவர். அதுவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களை, அந்த படத்தில் மிக வலுவாக சொல்லி இருந்தார். போலீஸ் விசாரணை என்ற பெயரில் நடக்கும் லாக்கப் கொடூரங்கள், படம் பார்த்தவர்களை பதைக்க பதைக்க வைத்தது.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 170 படம், எந்த மாதிரியான படமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதில், ரசிகர்களுக்கு மிக ஆர்வமாக இருக்கிறது. ஆனால், இது சமூக அரசியல் பேசுகிற படம்தான் என, இயக்குநர் தசெ ஞானவேல் துவக்கத்திலேயே கூறிவிட்டதால், இந்த படத்தின் மையக்கரு, எந்த மாதிரியான சமூக பிரச்னையை எதிர்கொள்ளும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
முதலில் இன்றைய கல்விச்சூழல், குறிப்பாக கார்பரேட் நிறுவனங்களில் கல்வி பயிற்சி மையங்கள் குறித்து, இந்த படத்தில் ரஜினி பேசலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வரும் நிலையில், கல்வி கொள்கைகள் குறித்து ரஜினி பேசினால், கடும் விமர்சனங்கள் எழலாம் என்றும் கருத்து பரவியது.
இதையடுத்து, ரஜினி 170 படம், போலி என்கவுன்டர் குறித்து பேசப்படும் படமாக இருக்கும். ரஜினி போலீஸ் அதிகாரியாக படத்தில் வருகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், ரஜினி இதுவரை அந்த கெட்டப்பில் வரவில்லை. தவிர ஜெயிலர் படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரியாக தான் நடித்திருந்தார் என்பதால் தொடர்ந்து அதே கெட்டப்பில் ரஜினியை காட்டவும் வாய்ப்பில்லை.
இந்நிலையில், பனங்குடியில் நடந்து வரும் படப்பிடிப்பில், ரஜினி செங்கல் சூளை ஒன்றில் ஆய்வு நடத்தி, கொத்தடிமைகளை மீட்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இதில் கொத்தடிமைகளை மீட்கும் அதிகாரியாக ரஜினி இருக்கலாம். கொத்தடிமைகளாக வாழும் அப்பாவி மக்களின் நிலை குறித்த சமூக அரசியல் பேசும் படமாக ரஜினி 170 இருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.





