விண்ணைத்தாண்டி வருவாயா வேட்டையாடு விளையாடு வாரணம் ஆயிரம் போன்ற பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். இயக்குனராக இருந்த அவர் ஒரு கட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளராகவும் மாறினார். அதுவே ஒரு கட்டத்தில் அவரை பல நிதி சிக்கல்களில் சிரமங்களில் சிக்க வைத்து விட்டது.
பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நிதி அதிபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி படங்களை தயாரிக்கின்றனர். பல கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்படும் அந்த படங்கள் படுதோல்வி அடைந்தாலோ அல்லது பல காரணங்களால் படத்தை எடுத்து முடிக்க முடியாமல் பாதியில் நின்று போனாலே பலத்த நஷ்டம் என்பது தயாரிப்பாளருக்கு தான்.
அதனால் சினிமா இயக்குனராக இருந்த கௌதம் மேனன் தயாரிப்பாளராக மாறியதால் பல நிதி நெருக்கடிகளை சந்தித்தார். கடனாளியாக ஒரு கட்டத்தில் மாறினார். அவர் தயாரித்த படங்களே அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறிய நிலையில் அவர் தயாரித்து டைரக்ட் செய்த படம் துருவ நட்சத்திரம் பல ஆண்டுகளாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் உள்ளது. இந்த படம் வருகிற 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே தகவல் பரவியது. ஆனால் இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் தனது இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் கூறியதாவது, கடந்த 2018ம் ஆண்டு இந்த படத்தை யூனிவர்ஸ் போன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனினும் படத்தின் பிரச்சனைகளை தீர்க்கவே நீண்ட காலம் கடந்துவிட்டது. எங்களுக்கு பணதேவை இருந்ததால் இந்த படத்திற்கு லியோ திரைப்படம் மிகவும் உதவிகரமாக இருந்தது.
படத்தின் ரிலீஸை ஒட்டி நாங்கள் சில சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டோம். அவற்றை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரே ஒரு பிரச்சனை தான் மீதம் உள்ளது. வரும் வாரத்தில் அதுவும் முடிக்கப்பட்டு விடும் என்று கௌதம் மேனன் கூறியிருக்கிறார். அதனால் விரைவில் குறிப்பிட்ட தேதியில் துருவ நட்சத்திரம் படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.





