சினிமாவில் நடிப்பவர்கள் பெரும்பாலும் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். சில நடிகர்கள் நடிகைகள் கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு நடிக்க வந்திருப்பார்கள். அதே நேரத்தில் 1970 80களில் படிக்க மாட்டேன் என்று பெற்றோரிடம் மறுப்பு தெரிவித்து நடிக்க வந்த நடிகர்கள் நடிகைகள் ஏாளமானோர் உண்டு.
அதே போல் படிப்பில் ஆர்வம் இருந்தும் வீட்டில் நீடித்த வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் நாடக கம்பெனிகளில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து நடிகராக நடிகையாக சினிமாவில் ஜெயித்தவர்களும் உண்டு. இப்படி படிப்புக்கும் கலைஞர்களுக்கும் ஒரு தொடர்ந்து இருந்து வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவர் நடிகை ஸ்ரீ லீலா. புஷ்பா 2 படத்தில் ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாடிய அவர் பிறகு நேரடியாக தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தில் நாயகியாக ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
அடுத்ததாக இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் டி 55 படத்தில் ஸ்ரீலீலா நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அவரது 64வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீலீலா ஏற்கனவே கமிட் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ஸ்ரீலீலா படங்களில் நடித்துக் கொண்டே எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு படித்து வந்தார். அவரது குடும்பத்தில் உள்ள பலரும் பெரிய படிப்பாளிகள். முக்கிய அரசு துறைகளில் பெரிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். அதனால் சினிமாவில் நடித்தாலும் கண்டிப்பாக டாக்டராக வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் ஸ்ரீலீலாவிடம் கூறியிருந்தனர்.
தனது குடும்பத்தினரின் கோரிக்கையை ஒரு சவாலாக ஏற்று இப்போது எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை நடிகை ஸ்ரீலீலா முடித்தார். நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் நடிகை ஸ்ரீலீலா டாக்டர் பட்டம் பெற்றார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது. ஏற்கனவே நடிகைகள் சாய் பல்லவி அதிதி ஷங்கர் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





