தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று கொண்டாடப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு ஜோடியாக பல முன்னணி நட்சத்திர நாயகிகள் நடித்திருக்கின்றனர். அப்படிப்பட்ட கமல்ஹாசனுக்கு ஜோடியாக காமெடி நடிகை கோவை சரளா நடிக்கிறார் என்ற போது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். இது எப்படி சாத்தியமாகும் என்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஏனெனில் கவுண்டமணி செந்தில் போன்றவர்களுக்கு காமெடி கேரக்டரில் ஜோடியாக நடித்தவர் கோவை சரளா. எனினும் பாலுமகேந்திரா இயக்கிய சதிலீலாவதி படத்தில் கமல் தனக்கு ஜோடியாக கொங்கு தமிழ் பேசி நடிக்க கோவை சரளா தான் சரியாக இருப்பார் என்று நடிக்க வைத்தார். அந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது.
தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஆச்சி மனோரமா. இதில் 200 படங்களுக்கு மேல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன் மனோரமா நடித்திருக்கிறார். அவரது அசத்தலான நடிப்பை பார்த்து பொம்பள சிவாஜி என்றும் ரசிகர்கள் அழைப்பது வழக்கமாக இருந்தது.
காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த மனோரமா ஒரு படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்றால் அது நம்ப முடிகிறதாஉ ஆனால் உண்மைதான். ஞானப் பறவை என்ற படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக மனோரமா நடித்திருக்கிறார். வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கத்தில் கடந்த 1991ம் ஆண்டில் வெளிவந்த ஞானப் பறவை படத்தில் ஹரிஷ் குமார் சசிகலா ஆகியோர் பிரதான கேரக்டரில் நாயகன் நாயகியாக நடித்திருந்தார்கள்.
மேலும் இந்த படத்தில் ராஜசேகர் விகே ராமசாமி காந்திமதி ராஜிவ் சின்னி ஜெயந்த் சார்லி கேஎஸ் ரகுராம் சுதா பிரியா தில்லை ராஜன் குமரன் முத்துக்குமார் உள்ளிட்ட பல நடித்திருந்தனர். இந்த படத்தை ஆர் தனபாலன் தயாரித்திருந்தார். எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். தனது ஒரே செல்ல மகளின் காதலும் தற்கொலையும் வயதான தம்பதியை எப்படி பாதிக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இதில் வயதான கணவன் மனைவியாக சிவாஜி கணேசனும் மனோரமாவும் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்வேறு படங்களில் நடிகை மனோரமா சிவாஜி கணேசனை அண்ணா என்று அழைக்கும் கேரக்டரில் தான் நடித்திருந்தார். மேலும் பெரும்பாலும் சிவாஜியை அண்ணா என்று அழைப்பதுதான் மனோரமாவின் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.





