மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர் ஜெயராம். அவர் தமிழிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கோகுலம் பஞ்சதந்திரம் தெனாலி பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 என்ற படத்திலும் நடிகர் ஜெயராம் நடித்திருக்கிறார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமான இந்த கோவிலுக்கு மண்டல பூஜை மற்றும் மகர ஜோதியைக் காண ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரை வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் இருந்த தங்க கவசங்களை செப்பனிட சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. இந்த கவசங்களை செப்பனிடும் பணிக்காக சிலைகள் இருந்த தங்க கவசங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது அந்த தங்க கவசங்களில் இருந்த 4.5 கிலோ தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது ஐயப்ப பக்தர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கேரளா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. மேலும் கேரளா மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்த விசாரணைக்குழு தொடர்ந்து விசாரணைகளை தீவிரப்படுத்தியது. இந்த முறைகேடு தொடர்பாக தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக் கொண்ட தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கோவில் தந்திரி கண்டரரு ராஜீவர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கேரளா போலீசார் பதிவு செய்த எப்ஐஆர் அடிப்படையில் பண மோசடி வழக்கை கடந்த 9ம் தேதி அமலாக்க துறையும் கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயராமின் வீட்டில் சபரிமலை தங்கக் கவசங்களை வைத்து பூஜை செய்த படங்கள் இணையத்தில் வெளியாகின. இதையடுத்து சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் நடிகர் ஜெயராம் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்து வந்ததும் விசாரணையில் உறுதியானது.
இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை அடுத்து நடிகர் ஜெயராம் இன்று கொச்சியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உள்ளார். அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ஜெயராம், இந்த விஷயத்தில் அனைத்து உண்மைகளும் வெளியே வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.





