தமிழ் சினிமாவில் எப்போதுமே பாடல்களுக்கு என்று ஒரு தனி சரித்திமும் வெற்றியும் இருக்கிறது. ஒரு படம் தோற்றுப் போனாலும் அந்த படத்தில் வரும் பாடல்கள் ரசிகர்களிடம் ஜெயித்திருக்கின்றன. ஏனென்றால் படத்தையும் கடந்து அந்த பாடல்கள் ரசிகர்களின் மனதில் நின்று விடுகின்றன.
சில படங்களில் கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப வரும் பாடல்கள் அந்த படத்தின் கதை ஓட்டத்தை இன்னும் வலிமை ஆக்குகிறது. மேலும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தின் கதையோட்டம் மீதான ஆர்வத்தை எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அதனால் சிச்சுவேஷன் சார்ந்த பாடல்கள் அந்த கேரக்டர்களுக்கு இன்னும் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் சமீபகாலமாக படத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. கதை ஓட்டத்துக்கு நடுவே இடை செருகலாக திணிக்கப்படும் பாடல்கள் ரசிகர்களுக்கு எரிச்சலை விரக்தியை தான் ஏற்படுத்துகின்றன. அதனால்தான் பாடல் காட்சிகள் வந்தால் ரசிகர்கள் பாத்ரூம் கேண்டீன் புகைபிடிக்க சென்று விடுகின்றனர்.
இந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஸ்ரேயா கோஷல். ஏராளமான ஹிட் பாடல்களை சினிமா ரசிகர்களுக்கு தந்தவர். பல தேசிய விருதுகளை தனது குரல் வளத்தால் வென்றவர். தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி கன்னடம் என பல மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்களிடம் மிகப்பெரிய செல்வாக்கை பெற்றவர் ஸ்ரேயா கோஷல் என்றால் அது மிகையல்ல.
சமீபத்தில் பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது ரசிகர்கள் தரும் லைக்குகளில் இல்லை. ஒரு இசை கச்சேரியில் அந்த பாடல் ஒலிக்கும் போது ரசிகர்களும் சேர்ந்து பாடுவதுதான். ரசிகர்களின் உதடுகள் அந்த பாடலை உச்சரிப்பதுதான். இதுதான் இசைக்கலைஞர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது மற்றும் அங்கீகாரம்.
வெறுமனே லைக்குகளை யாரும் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ரசிகர்களின் மனநிலையை வெல்வதுதான் அந்த பாடலின் உண்மையான வெற்றி. ஒருவர் என்ன மனநிலையில் இருந்தாலும் அந்த மனதை அந்த பாடல் துளைத்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுதான் அந்த பாடலின் உண்மையான வெற்றி என்று பாடகி ஸ்ரேயா கோஷல் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் அவரை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





