நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “ஜெயிலர்” திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் தரமான சம்பவத்தை செய்துள்ளது. படம் வெளியாகி 8 நாட்களே முடிவடைந்துள்ள நிலையில் சுமார் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த வருடம் கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படத்தின் மொத்த வசூலே ரூ.400 கோடிகள்தான் என்று செய்திகள் வந்தது. தற்போது இந்த வசூலை “ஜெயிலர்” முறியடித்துள்ளது. அதே போல் சென்ற ஆண்டு வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் உலகளவில் ரூ.500 கோடி வசூல் செய்தது.
மிக விரைவிலேயே “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வசூலை “ஜெயிலர்” திரைப்படம் முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் இயக்குனர் நெல்சனுக்கு ஒரு மிகப் பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை குறித்து ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் ஒரு காட்சியில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் சரியாக நடிக்கவில்லை என்று நெல்சன் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை நடிக்க வைத்தாராம்.

நெல்சன் அவ்வாறு செய்தபோது ரஜினிகாந்த் அவரை ஒரு மாதிரி பார்த்தாராம். அதற்கான அர்த்தம் என்ன என்று நெல்சனுக்கு அப்போது தெரியவில்லையாம். அன்றைய நாள் படப்பிடிப்பு முடிவடைந்தபிறகு, ஒரு உதவி இயக்குனர் நெல்சனிடம் வந்து, “நீங்க அந்த நடிகரை வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்களே, அவர் ரொம்ப வருத்தப்படுவாரு. அதனால் அவரை படத்தில் என்னுடைய பக்கத்தில் நிற்கவைத்துக்கொள்ளவா என்று ரஜினி சார் கேட்கிறார்?” என்று கூறினாராம்.
ரஜினிகாந்த் அவ்வாறு கேட்கச் சொல்லி அனுப்பிவிட்டது, நெல்சனுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம். “நாம் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோம் போல” என்று நினைத்துக்கொண்டாராம். “ரஜினிகாந்த் நினைத்திருந்தால் அந்த நபரை அருகில் நிப்பாட்டி வைத்திருக்கலாம். யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆனால் நம்மிடம் இப்படி பெர்மிஷன் கேட்கிறாரே” என்று நினைக்கத் தோன்றியதாம்.
அதன் பின் நெல்சன், “அவர கூப்பிட்டு வந்துரு. ரஜினி சார் எங்க நிக்க வைக்குறாரோ அங்க அவர் நிக்கட்டும்” என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டாராம்.





