தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் இருந்த காலகட்டம் அது. தினமும் இராமாவரம் தோட்டத்து வீட்டில் இருந்து முதல்வர் எம்ஜிஆர் கோட்டைக்கு கிளம்பும் போது பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரை சந்திக்க காத்திருப்பார்கள். அவரை சந்தித்து பேசிவிட்டு எம்ஜிஆர் கிளம்பிச் செல்வது வழக்கம்.
அன்றும் அதே போல் ஒரு கூட்டம் இருந்த நிலையில் எம்ஜிஆர் அவர்களை பார்த்து விட்டு காரில் ஏறச் சென்றார். அப்போது ஒருவர் எம்ஜிஆரின் காலில் விழுந்து அழுதார். பதறிப் போன எம்ஜிஆர் அவரை பிடித்து எழுப்பி விசாரித்தார். அப்போது அவர், ஐயா நான் ஈரோடு சேர்ந்தவன்.
என் பிள்ளைக்கு இன்ஜினியரிங் சீட் வாங்கி தருவதாக சொல்லி உங்களது உதவியாளர் என்னிடம் 45 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றி விட்டார் என்று கூறியிருக்கிறார். அவர் சுட்டிக்காட்டிய அந்த உதவியாளரும் தலைகுனிந்துவிட எம்ஜிஆருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.
ஒருவேளை இன்ஜினியரிங் சீட் கிடைத்திருந்தால் என்னிடம் இந்த புகாரை சொல்லியிருக்க மாட்டீர்கள், என்னை கேட்டா பணம் கொடுத்தீர்கள் என்று கேட்டுவிட்டு அந்த நபரை அங்கிருந்து அனுப்பி விட்டார். அங்கிருந்த கூட்டம் சென்ற பிறகு, உதவியாளரை அழைத்து ஓங்கி ஒரு அறைவிட்ட எம்ஜிஆர் உன்னால் எனக்கு தான் கெட்ட பெயர் என்றும் கோபப்பட்டுள்ளார்.
இந்த தகவல் எப்படியோ அப்போதைய எதிர்கட்சி தலைவர் கருணாநிதிக்கு தெரிந்து விட இதுகுறித்து சட்டசபையில் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுந்து பதிலளித்த எம்ஜிஆர், அப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மைதான். அந்த உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த நபருக்கும் உரிய தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி கருணாநிதியை ஆஃப் செய்து விட்டார்.
தனது உதவியாளர் மீது எழுந்த பண மோசடி குற்றச்சாட்டை சட்டசபையில் மறைக்காமல், அதுகுறித்து கருணாநிதி எழுப்பிய கேள்விக்காக அவர் மீது எரிச்சலடையாமல் நேர்மையாகவும் பண்பாளராகவும் எம்ஜிஆர் அப்போது நடந்துக்கொண்டார். அதனால் தான் இன்றும் அவர் மக்கள் தலைவராக புரட்சித் தலைவராக தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.





