எப்போதுமே நட்புக்கு மரியாதை தரும் குணம் கொண்டவர் நடிகர் விஜய். அவரது நட்பு வட்டாரம் மிகவும் குறுகியது என்றாலும் விஜயுடன் நட்பாக பழகிய யாரும் அவரது நட்பை இழக்க தயாராக இருப்பதில்லை. அந்தளவுக்கு அவரது நட்பு வட்டாரம் அன்று முதல் இன்று வரை அப்படியே தொடர்கிறது.
அந்த வகையில் நடிகர்கள் சஞ்சீவ் ஸ்ரீமன் ஸ்ரீநாத் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் தனது நண்பர்களை தனது படங்களில் நடிக்க அனுமதிக்குமாறு இயக்குனரிடம் பரிந்துரை செய்தது இல்லை. அதே போல் அவர்களும் விஜயிடம் அப்படி கேட்டது இல்லை.
அந்த வகையில் நடிகர் விஜயுடன் பல படங்களில் நடித்தவர். ஆரம்ப காலத்தில் இருந்தே விஜயுடன் நெருக்கமான நட்பில் இருப்பவர் காமெடி நடிகர் ஸ்ரீநாத். அவர் நடிகர் விஜயுடன் நாளைய தீர்ப்பு மாண்புமிகு மாணவன் வேட்டைக்காரன் மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு இந்த தேர்தலில் தவெக கட்சி சார்பில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக இன்று நடிகர் விஜய் கட்சி மேடையில் அறிமுகப்படுத்தினார்.
எனது நண்பர் ஸ்ரீநாத் தூத்துக்குடி வேட்பாளர் என்று உற்சாகமாக விஜய் அறிவித்தார். அப்போது பறக்கும் முத்தங்களை ஸ்ரீநாத் சைகையாக அனுப்ப விஜய் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். நடிகர் விஜய்க்கு பிறகு இந்த தேர்தலில் களத்தில் நிற்கும் ஒரே நடிகர் ஸ்ரீநாத் மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும் தன்னிடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக கார் டிரைவராக பணி செய்து வரும் ராஜேந்திரன் என்பவரது மகன் சபரிநாதனுக்கும் நடிகர் விஜய் இந்த தேர்தலில் வாய்ப்பளித்துள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் சபரிநாதனை விஜய் வேட்பாளராக அறிவித்துள்ளார். தனது ஊழியர் மகனுக்கும் வேட்பாளர் வாய்ப்பளித்த விஜயின் பெருந்தன்மையை அரசியல் வட்டாரத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.





