தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக வலம் வருபவர் சுந்தர் சி. நடிகை குஷ்புவின் கணவர். திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இப்போது மதுரை மத்திய தொகுதியில் அதிமுக பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் சுந்தர்சி நடிகர் விஜய் குறித்து பேசுகையில், என்னுடைய மனைவியை அவர் அக்கா என்கிறார். என் மனைவி குஷ்புவும் அவரை தம்பி என்று அழைக்கிறார். இந்த தொகுதியில் அதிமுக திமுக இடையே தான் போட்டி. அதனால் விஜயை விமர்சிக்க அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.
கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான படம் மதகஜ ராஜா. இந்த படம் 2013ம் ஆண்டில் பொங்கலுக்கு ரிலீஸாக வேண்டிய நிலையில் 12 ஆண்டுகள் கழித்து 2025ம் ஆண்டில் பொங்கலுக்கு வெளியானது. மதகஜ ராஜா படத்தை எம்ஜிஆர் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக டைட்டில் வைத்திருந்தனர்.
இந்த படம் 12 ஆண்டுகள் கழித்து வெளியான போதிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களிடம் வரவேற்பை அள்ளிய நிலையில் வசூலையும் குவித்தது. சுமார் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது.
இதுகுறித்து இயக்குனர் சுந்தர் சி பேசியதாவது, எனக்கு மிகவும் பிடித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். எனக்கு அவர் மீது பயங்கர சென்டிமென்ட் உண்டு. அவரோட மிக தீவிரமான ரசிகன் நான். காலையில் நான் தூங்கி விழித்தவுடன் அவரது ஏதாவது ஒரு பாட்டோ அல்லது அவரது புகைப்படமோ ஒரு போஸ்டரோ அவரோட சிலையோ பார்த்தால் அந்த நாளே எனக்கு ரொம்ப அற்புதமாக இருக்கும்.
அப்படி ஒரு சென்டிமென்ட் எனக்கு. அவரோட பேரை இந்த படத்துக்கு வெச்ச நேரமோ என்னமோ அவரோட ஆசிர்வாதம் அதிர்ஷமும் எங்களுக்கு சேர்ந்து வந்திருக்கு. அதனால் மக்கள் திலகத்துக்கு என்னுடைய இதய அஞ்சலி என்று மதகஜ ராஜா பட விழாவில் இயக்குனர் சுந்தர் சி பேசியிருக்கிறார்.





