ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி அமோக வெற்றி பெற்றுள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிக்கும் நிலையில் “ஜெயிலர்” திரைப்படம் மாஸ் ஹிட் அடித்திருப்பது ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் ரஜினி ரசிகராக இல்லாமல் ரஜினியை விரும்பும் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் “ஜெயிலர்” திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் அவர்களின் தலையில் இடி விழுந்தது போல் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அமைந்தது. அதாவது “ஜெயிலர்” திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த், இமயமலையில் இருந்து திரும்பி உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரது காலில் விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதில் இருந்து ரஜினியை பலரும் கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், ரஜினியை குறித்து மிகவும் கடுமையாக பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு…

“ரஜினியினுடைய ரசிகர்களாக இருப்பது மிகவும் கடினம் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே வருகிறேன். இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி பதில் சொல்லும் இடத்திற்கு ரஜினி ரசிகர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். நேற்றில் இருந்து ரஜினிகாந்தை பலரும் கடுமையாக ட்ரோல் செய்கின்றனர். அந்த ட்ரோல்களுக்கு எல்லாமே ரசிகர்கள் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி ஒரு இழிவான கேவலமான நிலையை தன் ரசிகனுக்கு ரஜினிகாந்த் கொடுக்க வேண்டுமா? இதுதான் என்னுடைய கேள்வி. ரஜினிகாந்தின் கொள்கைகள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை அவர் மனதில் வைத்துக்கொள்ளலாம். ஓட்டு போடும் நாள் வரும்போது தாமரைக்கு நீங்கள் கம்பீரமாக ஓட்டுப்போடுங்கள். அதில் தவறே இல்லை. ஆனால் இப்படி வெளிப்படையாக செய்யும்போது ரசிகர்கள் பலரும் சங்கடங்களை சந்திக்கிறார்கள்” என்று அந்தணன் அந்த வீடியோவில் ரஜினிகாந்தை விமர்சித்துள்ளார்.





