தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜூனா கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் கட்சியின் இணை செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் தேர்தல் சின்னமான விசில் சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் பேசியதாவது, தவெக கட்சியின் சின்னம் விசில் என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என்று அறிவுறுத்துங்கள். கப்பு முக்கியம் பிகிலு என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்களுக்கு உத்வேகம் தர்ற மாதிரி உண்மையாக நடந்த ஒரு கதை ஒண்ணு சொல்றேன். சொந்த நாட்டையே ஒரு கூட்டம் அபகரிக்குது. சொந்த நாட்டிலேயே இருக்க முடியாத அளவுக்கு ஒரு நெருக்கடி ஏற்படுது. அதனால் அந்த நாட்டை விட்டு வெளியேறி போய் காடு மலை பகுதிகளில் மறைந்து வாழ வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது.
என்னடா இப்படியே ஓடீட்டு இருக்கிறோமே என்று சொல்லிட்டு தங்களோட நட்பு சக்திகள் கிட்ட பேசி ஒரு பெரும் படையை திரட்டிக்கிட்டு அதிரடியாக ஒரு போரை நடத்தி அப்படி அந்த நாட்டையே திருப்பி மீட்டெடுத்தது யார் தெரியுமா? நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான ராணி வேலு நாச்சியார் அம்மையார் தான்.
அவங்களுக்கு நட்பு சக்தியாக இருந்து அவர்களுக்காக உழைத்தது சின்ன மருது பெரிய மருது சையது கார்கி என்கிற அந்த 3 பேரும்தான். அப்போது இருந்த ஆங்கிலேயர் படை ஆற்காட்டு படை என்ற அந்த 2 படைகளை அடிச்சு துவம்சம் பண்ணிட்டு அந்த நாட்டை மீட்டெடுத்தது ராணி வேலு நாச்சியார். அன்னிக்கு இருந்த ஆங்கிலேய படை ஆற்காட்டு படை மாதிரி இப்போ என்னெ்ன படைகள் இருக்கிறது என்று உங்களுக்கு நல்லாவே தெரியும்.
அந்த 2 படைகள் மட்டுமல்ல, இன்னும் எத்தனை படைகள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க நல்ல தலைமையும் இத்தனை சக்திகளும் என்கூட இருக்கும் போது இத்தனை பெரிய மருது, இத்தனை சின்ன மருது இத்தனை சையது கார்கி என் கூட இருக்கும் போது நம்ம நாட்டை நாம மீட்டெடுக்க முடியாதா என்ன? என்று நடிகர் விஜய் ஆவேசமாக பேசினார்.





