குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் அம்பிகாவின் மகளாக சிறுமியாக நடித்திருந்தார். பிறகு என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்து தமிழில் நாயகியாக அறிமுகமானார். ரஜினியுடன் எஜமான் படத்தில் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
தொடர்ந்து ரஜினி கமல் விஜயகாந்த் அஜீத்குமார் சரத்குமார் சத்யராஜ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த மீனா கடந்த 1990களில் நட்சத்திர நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.
தமிழில் பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த மீனா நடிகர் விஜய் மற்றும் நடிகர் அரவிந்த் சாமிக்கும் மட்டும் ஜோடியாக நடிக்கவில்லை. பலமுறை அதற்கான வாய்ப்பு வந்தும் மற்ற படங்களில் அவர் கமிட் ஆகியிருந்ததால் அந்த ஹீரோக்களுடன் மீனா ஜோடி சேர முடியவில்லை.
எனினும் ஒரு படத்தில் சரக்கு வெச்சிருக்கேன் இறக்கி வெச்சிருக்கேன் என்ற பாடல் காட்சியில் மட்டும் நடிகர் விஜயுடன் மீனா நடனம் ஆடியிருப்பார். ஆனால் அதே நேரத்தில் நடிகர் விஜயுடன் நடிகை மீனாவின் மகள் நைனிகா தெறி படத்திலும் அரவிந்த் சாமியுடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் மகளாக நடித்திருந்தார்.
இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் கலா நடிகை மீனாவை நேர்காணல் செய்தார். அப்போது நடிகை மீனாவின் புகைப்பட ஆல்பங்களை கலா பார்வையிட்டார். அதில் நடிகர் விஜயும் நடிகை மீனாவும் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இருந்தன. இதுகுறித்து மீனாவிடம் கலா மாஸ்டர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நடிகை மீனா கூறியதாவது, ஒருமுறை நடிகர் விஜய் என்னை பார்க் இங்கு வீட்டுக்கு வந்திருந்தார். ஒரு பத்திரிகைக்காக அவரே பேட்டி எடுப்பது போல் வந்து என்னை பேட்டி எடுத்தார். கேள்வி எல்லாம் அவரே எழுதிக்கொண்டு வந்திருந்தார். அவர் கேட்ட கேள்விகள் எல்லாம் நன்றாக ஜாலியாக தான் இருந்தது. அப்போது தான் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது என்று மீனா கூறியிருக்கிறார்.





