- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் சூதாடிகளின் ஊழலை ஒழிக்க விசில் புரட்சிக்கு தயாராகுங்க, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்...

அரசியல் சூதாடிகளின் ஊழலை ஒழிக்க விசில் புரட்சிக்கு தயாராகுங்க, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்!

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை மறுதினம் 23ம் தேதி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி திமுக கூட்டணி தவெக கட்சி நாம்தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் நிற்கிறது. விசில் சின்னம் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, மக்களே…மீண்டும் சொல்கிறேன். இத்தனை நெருக்கடிகளையும் இத்தனை நிர்பந்தங்களையும் இத்தனை வேதனைகளையும் உங்கள் விஜய் தாங்கிக்கொண்டு நிற்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது உங்களின் உயர்தனி உள்ளன்பு மட்டும்தான்.

- Advertisement -

எந்த அரசியல் கட்சி முன்புலமோ பின்புலமோ இன்றி அரசியலுக்கு வந்த என்னை ‘நீ வாப்பா’… ‘நீ வா தம்பி’… ‘நீ வாண்ணா’… ‘நீ வா நண்பா’… ‘நீ வா தோழா’… ‘நாங்க பாத்துக்கறோம்’… என்ற உங்களின் பேரன்பும் பேராதரவும் மட்டுமே என்னை இயக்கும் மாபெரும் உந்துசக்தி என்பதே உண்மை.

இப்போதும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த ‘மற்றும் பலர்’ சக்தியாலும் பிரிக்கவே இயலாது.

- Advertisement -

அப்படிப் பிரிக்க நினைக்கும் அனைத்து சக்திகளையும் மக்கள் அக்குவேறு ஆணிவேறாகத் தனித்தனியாகப் பிரித்து, தூக்கி வீசி எறியப் போவது உறுதி. பணத்தை மட்டுமே நம்பி தத்தம் சுயலாபங்களுக்காக அரசியல் களமாடும், எதிர்வரும் நம் தலைமுறையின் கனவுகளை அடகு வைக்கத் துடிக்கும் அடிமை அரசியல் சூதாடிகளின் வேறு எந்தச் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்தாலும், பிளவுவாத சக்திகளுக்கான மறைமுக அல்லது நேரடி ஆதரவாக மட்டுமே அது மாறும்.

ஆகவே, எப்போதும்போல அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் – லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ம் தேதி அன்று, நீங்கள் அனைவரும் திருவிழாக் கோலம் பூண்டு, விசில் புரட்சிக்குத் தயாராகி, குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்க வேண்டிய, எவ்வித மறுசிந்தனைக்கும் இடம் தராத ஒற்றைத் தேர்வாக “விசில் சின்னம்” மட்டுமே இருக்க வேண்டும் என உங்களை இருகரம் கூப்பி வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன். வாகை சூடுவோம். வரலாறு படைப்போம். வெற்றி நிச்சயம்.. என்று விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்