தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் விக்னேஷ். கடந்த 1992ம் ஆண்டு வெளியான சின்னத்தாயி என்ற படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன.
தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் கிழக்குச் சீமையிலே படத்தில் விக்னேஷ் நடித்து அதிக கவனமும் வரவேற்பும் பெற்றார். தொடர்ந்து செல்லக்கண்ணு மண்ணுக்கு மரியாதை பொங்கலோ பொங்கல் ராமன் அப்துல்லா சூரி ஆச்சாரியா உள்ளிட்ட பல படங்களில் நடிகர் விக்னேஷ் நடித்திருக்கிறார்.
கடந்த 2018ம் ஆண்டில் வெளியான அன்புக்கு பஞ்சமில்லை என்ற படத்தில் விக்னேஷ் நடித்திருந்தார். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நடிகர் விக்னேஷ் சிறந்த கலைஞர் என்றாலும் அவருக்கு நல்ல திரைப்படங்கள் அமையாததே அவரது வெற்றிக்கு தடையாக இருந்து விட்டது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விக்னேஷ் கூறியதாவது, முதல் முறையாக நான் நடிகராக அறிமுகமான படம் இசைஞானி இளையராஜா இசையில் உருவானது மிகவும் பெருமையான விஷயம்தான். ஆனால் என்னுடைய முதல் படத்துக்கு முந்தைய காலகட்டம் மிகவும் சோதனையானது. மிகவும் வேதனையானது. அந்த அவமானமான காலங்கள் எதிரிக்கு கூட அப்படி ஒரு நிலமை வரக்கூடாது.
தாணு சார் தயாரிப்பில் பாலு மகேந்திரா டைரக்ஷனில் இளையராஜா இசையில் வண்ண வண்ண பூக்கள் என்ற படத்தில் நான்தான் ஹீரோ என கமிட் ஆகி 5 நாட்கள் வரை நடித்தேன். நான் 5 நாட்கள் நடித்த நிலையில் அந்த படத்தில் என்னை நீக்கினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய வேதனையான விஷயம். எனக்கு தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் கூட வந்துவிட்டது.
அப்போது அந்த படத்தில் கோ டைரக்டராக இருந்தவர் பாலா சார்தான். அவர்தான் என்னை அவர்கூடவே ரெண்டு மூணு நாள் வெச்சிருந்து ஆறுதல் சொல்லி என் மனதை தேற்றி விட்டார். எதுவும் எனக்கு ஆகி விடக் கூடாது என்று கவனமாக பார்த்துக்கொண்டார். அவரது சேது படத்தில் என்னை ஹீரோவாக்க நினைத்தார். ஆனால் அப்போது படம் தயாரிக்க அவரிடம் பணம் இல்லாமல் போய்விட்டது என்று நடிகர் விக்னேஷ் கூறியிருக்கிறார்.





