சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்படுகிறது. இது புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி என்று சொல்லப்படுகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் தான் நடிகர் தனுஷ் பத்தாம் வகுப்பு வரை படித்தார். இந்த பள்ளிக்கு ஆண்டுதோறும் தனது பிறந்த நாளில் சென்று தனது ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது தனுஷின் வழக்கமாக உள்ளது.
இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த பள்ளி கட்டடம் ஒன்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டிடம் ஒன்றை நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் பள்ளிக்கு கட்டிக் கொடுத்துள்ளார். இதற்கு தனுஷ் பிளாக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டட திறப்பு விழாவில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
அப்போது நடிகர் தனுஷ் பேசியதாவது, என்னுடைய ஆசிரியர்களை பார்க்கும்போது பல நினைவுகள் எனக்கு வருகின்றன. வாணி மிஸ் மிகவும் கருணைமிக்க ஒருவர். முன்பெல்லாம் நான் படிக்கும்போது ஆங்கிலம் எனக்கு சரியாக வராது. ஆனால் தமிழ் நன்றாக வரும். இப்போது அப்படியே மாறிவிட்டது.
நான் நிறைய பேரை சந்திக்கிறேன். அவர்களில் பத்தில் எட்டு பேருக்கு தமிழ் எழுதவே வருவதில்லை. ஆனால் ஆங்கிலம் நன்றாக தெரிகிறது. இது மிகவும் வருத்தமான விஷயம். நான் ஒரு பிரெஞ்சு மொழி தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்தேன். பெல்ஜியம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. என்னிடம் ஆங்கிலம் தெரியுமா என்று கேட்டதும் தெரியும் என்றேன்.
அவர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள். ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள் என்று கேட்டதும் உங்கள் தாய்மொழி தானே உங்களுக்கு தெரிய வேண்டும்.ஆங்கிலம் உங்களுக்கு போனஸ் தானே என்றார்கள். உங்களுடைய தாய்மொழி தான் உங்களுக்கு முதலில் தெரிய வேண்டும். அதனை எழுத படிக்க தெரிய வேண்டும்.
தமிழ் வரவில்லை என்று சொல்வது பெருமையான விஷயம் கிடையாது. தாய்மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம் தான். கண்டிப்பாக தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான் இந்த நேரத்தில் என் தமிழ் ஆசிரியை சித்ராவை நினைத்துக் கொள்கிறேன். அவர் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை. தமிழிலும் கவனம் செலுத்துங்கள் என்று நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார்.





