தமிழக அரசியல் களத்தை பொருத்த வரை நடிகர் விஜய் காலடி வைத்த பிறகு ஒட்டுமொத்த மக்களின் பார்வையும் தமிழ்நாட்டு அரசியல் பக்கம் திரும்பியிருக்கிறது. முன்பெல்லாம் திமுக அல்லது அதிமுக என்ற இரட்டை நிலைப்பாட்டில் இருந்த மக்கள் விஜய் அரசியலுக்குள் வந்த பிறகுதான் மாற்றம் குறித்து பேசவே ஆரம்பித்தனர் என்றால் அது மிகையல்ல.
கடந்த 60 ஆண்டுகளாக திராவிட முன்னேற்ற கழகம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற 2 கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்த நிலையில் 1976ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை 3 முறை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழகத்தை ஆட்சி செய்த காலம் மட்டுமே தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது.
அதன்பிறகு திமுக தலைவர் கருணாநிதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களது மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலின் என தமிழகத்தில் ஆட்சி செய்த நிலையில் மக்களை திருப்திபடுத்தும் ஒரு நல்லாட்சியை அவர்கள் தரவில்லை என்பதே கசப்பான உண்மை. இந்த சூழலில் விஜய் கட்சி போட்டியிட்ட முதல் தேர்தலில் தமிழக வாக்குப்பதிவு சதவீதம் 85 கடந்துள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி அம்மா அக்கா தங்கைகள் என் தாத்தா அப்பா அண்ணன் தம்பிகள் என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக, நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய – உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும். குறிப்பாக, நான் நன்றி செலுத்த வேண்டியது, நம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் நம் கழகத் தோழர்களுக்கும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும்தான். இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்?
எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே…உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும். கழகத் தோழர்களுக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருக்கும் நன்றி. நம்பிக்கையோடு இருப்போம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று அந்த பதிவில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.





