தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக 1980 90களில் பல படங்களில் நடித்தவர் எஸ்வி சேகர். நாடகப்பிரியா என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களையும் அரங்கேற்றம் செய்தவர். அதிமுக பாஜக கட்சிகளில் இருந்த எஸ்வி சேகர் முன்னாள் எம்எல்ஏ என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது எந்த கட்சியிலும் இல்லை என்றாலும் திமுக ஆதரவாளராக இருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் குறித்து நடிகர் எஸ்வி சேகர் கூறியதாவது, இந்த தேர்தலில் நான் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தாலும் நேரடியாக தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் சோசியல் மீடியாவில் எனது கருத்துக்களை பதிவிட்டு பிரச்சாரம் செய்து வந்தேன்.
இந்த தேர்தலில் திமுக 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். திமுக 7வது முறையாக ஆட்சியும் ஸ்டாலின் 2வது முறையாக முதலமைச்சராகவும் ஆவது உறுதி. இந்த தேர்தலில் 4 முனை போட்டி என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழகத்தில் தேர்தல் என்றால் எப்போதுமே திமுக அதிமுகவுக்கு இடையே மட்டும்தான்.
வரும் மே 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் என்றால் என்ன என்பதை உணர்த்தும். அதன் மூலம் அவருக்கு ஒரு தெளிவு பிறக்கும். அதுபோல் விஜயின் அரசியல் வருகை மற்றும் அவரது வாக்கு வங்கி மற்ற கட்சிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 1 அல்லது 2 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
மறைந்த ஜெயலலிதாவின் இடத்தை தான் நிரப்பி விட்டோம் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பிறகு அந்த கட்சி சிதறிவிட்டது. இப்போது டிடிவி தினகரனின் அமமுக சந்தர்ப்பத்துக்காக மட்டுமே அதிமுகவின் இணைந்துள்ளது.
என்னை பொறுத்தவரையில் ஸ்டாலின் செய்த சாதனைகளுக்கும் அவரது ஆட்சியில் நடந்த செயல்பாடுகளுக்கும் இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று எஸ்வி சேகர் கூறியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம்தான் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று பலரும் கூறிவரும் நிலையில் 1 அல்லது 2 தொகுதிகளில் மட்டுமே தவெக வெற்றி பெற வாய்ப்பு என எஸ்வி சேகர் கூறியிருப்பது, காமெடியா உண்மையா என்பது வரும் மே 4ம் தேதி தெரிந்துவிடும்.





