தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் சட்டசபை தேர்தல் நேரத்தில் பல பகுதிகளில் தவெகவுக்கு ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார இறுதி நாளான கடந்த 21ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசினார். அப்போது அவர் குழந்தைகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதாவது குழந்தைகளே, உங்கள் பெற்றோரிடம் மிட்டாய் கேட்டு அடம்பிடிப்பதை போல இந்த தேர்தலி ல் இந்த விஜய்க்கு விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்லுங்கள் என்று விளையாட்டாக பேசினார். அது இப்போது வில்லங்கமாக மாறியுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை கணபதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் பாலகிருஷ்ணன் என்பவர், கோவை கமிஷனர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய், குழந்தைகளை ஓட்டு பொறுக்கும் கருவிகளாக பயன்படுத்தி மிஸ் யூஸ் செய்துவிட்டதாக அவர் புகார் அளித்துள்ளார். மேலும் சைபர் கிரைம் போலீஸ், தேர்தல் ஆணைத்திலும் இதுகுறித்து புகார் செய்திருக்கிறார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் குழந்தைகளை அவர்கள் பெற்றோரிடம் விஜய்க்கு ஓட்டுப் போடுமாறு அடம்பிடிக்க வேண்டும் என்று சொல்லி குழந்தைகளை தூண்டி விட்டுள்ளார்.
அதனால் விஜய்க்கு ஓட்டுப் போடாவிட்டால் சாப்பிட மாட்டேன் தூங்க மாட்டேன் படிக்க மாட்டேன் என்று குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடித்து பிரச்னை செய்கின்றனர். என்னுடைய 5 வயது மகனே என்னை அப்படி வற்புறுத்தினான். இப்படி நிறைய பெற்றோர்களுக்கு பிரச்னை ஏற்பட்டு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இப்படி குழந்தைகளை ஓட்டு பொறுக்கும் இயந்திரமாக மாற்றிய தூண்டிவிட்ட தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் தர வந்துள்ளேன். இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீஸ்க்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தபால் மற்றும் இமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.





