தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக துணை நடிகராக இருப்பவர் சிங்கமுத்து. பல படங்களில் வடிவேலு விவேக் சந்தானம் போன்றவர்களுடன் காமெடி கேரக்டரிலும் சிங்கமுத்து நடித்திருக்கிறார். அதிமுக சார்ந்த நடிகர் சிங்கமுத்து தேர்தல் காலங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் வடிவேலு மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் சிங்கமுத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அதிமுக ஆதரவாளர் மற்றும் காமெடி நடிகர் சிங்கமுத்து கூறியதாவது, இந்த தேர்தல் யாருமே யோசிக்க முடியாத தேர்தலாக இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரைப் பார்க்க பெரிய ரசிகர் கூட்டம் வருகிறது. இதற்கு முன்பாக தேர்தலில் அவர் போட்டியிட்டு இருந்தால் அவருக்கு எவ்வளவு சதவீதம் ஓட்டு வரும் என்பது தெரிந்திருக்கும்.
ஆனால் அவர் தேர்தலுக்கு வருவது இதுவே முதல்முறை என்பதால் அதை யாராலும் யூகிக்க முடியவில்லை. தமிழக மக்களும் ஒரு நடிகராக அவரால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதுவும் விஜய் எடுத்த உடனேயே முதலமைச்சராக வரவேண்டும் என்று நினைக்கிறார். புரட்சித்தலைவரால் கூட எடுத்தவுடன் முதலமைச்சராக வர முடியவில்லை.
இருந்தாலும் மக்கள் விஜயை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதை யாராலும் எதுவும் செய்ய முடியாது. சில நேரங்களில் எல்லா கட்டமைப்புகளும் இருக்கிற மிகப்பெரிய கட்சிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கிறது. விஜயின் சின்னம் விசில். விசில் என்பது பொதுவாகவே சினிமாவில் நல்ல சீன் வந்தால் மக்கள் விசில் அடித்து பழகிவிட்டார்கள்.
விசில் அடித்தாலே மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளலாம். அதிமுக விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லாது. அடுத்த 500 வருடங்களுக்கு ஒரே கட்சி இருக்கப் போகிறதா என்றால் இல்லை தானே? அடுத்தடுத்த தலைமுறை அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள். அப்படித்தான் விஜய் வந்திருக்கிறார். இந்த தேர்தலில் விஜய் எவ்வளவு வாக்குகளை பெறப்போகிறார் என்பதை பார்த்தால் தான் நமக்கு தெரியும்.
விஜயின் அரசியல் நடவடிக்கைகளை பார்க்காமலேயே அவருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தேர்தலுக்கு முன்பே அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து தனக்கு இத்தனை சீட் வேண்டும் என்று கேட்டிருந்தால் எடப்பாடியார் நிச்சயமாக கொடுத்திருப்பார். அவருக்கு பின் விஜய் இளம் தலைமுறைகளை தலைமை தாங்கி இருப்பதற்கான வாய்ப்பை காலம் கொடுத்திருக்கும் என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருக்கிறார்.





