தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. கோ கச்சேரி ஆரம்பம் தெனாவெட்டு சிவா மனசுல சக்தி நண்பன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இந்த ஆண்டின் துவக்கத்தில் பொங்கலுக்கு ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் பெரிய வெற்றியை கொடுத்தது.
நடிகர் ஜீவாவின் அண்ணன் ரமேஷ். இவர் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்படுகிறார். ஒஸ்தி ஜித்தன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ரமேஷ் ஜீவா அளவுக்கு பெரிய நடிகராக வெற்றி பெற முடியவில்லை. எனினும் ஜித்தன் படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்ததால் ஜித்தன் ரமேஷ் என அடையாளம் காணப்படுகிறார்.
நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்பி சௌத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏராளமான படங்களை சொந்தமாக தயாரித்துள்ளார். இவர் தயாரித்த பல படங்கள் வெள்ளி விழா படங்களாக பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.
தமிழில் இயக்குனர் விக்ரமன் இயக்கிய புது வசந்தம் படம்தான் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் படம். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து நாட்டாமை திருப்பாச்சி சூரியவம்சம் பூவே உனக்காக ஊர் மரியாதை முத்துக்காளை என் ஆசை மச்சான் காதலுக்கு மரியாதை உள்ளிட்ட ஏராளமான படங்களை ஆர்பி செளத்ரி தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரி இன்று தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூருக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் காரில் பயணித்த போது எதிரில் வந்த லாரி அந்த கார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆர்பி சௌத்ரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது அன்பு அப்பாவின் திடீர் மறைவால் அவரது இளைய மகன் நடிகர் ஜீவா நிலை குலைந்து போயிருக்கிறார். அவருக்கு குடும்பத்தார், நண்பர்கள் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி மறைவுக்கு திரை பிரபலங்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி மறைவு கோலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





