இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா திரிஷா இணைந்து நடித்த கருப்பு படம் இன்று அறிவித்தபடி ரிலீஸ் ஆகவில்லை. பைனான்சியர்கள் தந்த நெருக்கடியால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் தடைபட்டு நின்றுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு 150 கோடி ரூபாய் கடனில் சிக்கியிருப்பதால் இந்த படம் ரிலீஸ் ஆவது கேள்விக்குறியாகி உள்ளது.
கருப்பு படம் ரிலீஸ் ஆகாதது குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, ஆரம்பத்தில் இருந்தே கருப்பு படம் ரிலீஸின் போது நிதி சிக்கலால் இந்த படத்துக்கு பிரச்னை வரும் என்று கூறியிருந்தோம். அதன்படியே இப்போது நடந்து விட்டது. இந்த படத்துக்காக சில பைனான்சியரிடம் அதிக கடன்கள் பெறப்பட்டுள்ளது.
ஒரு பைனான்சியரிடம் மட்டுமே 60 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். திருப்பூர் சுப்ரமணியத்திடம் 20 கோடி ரூபாய் கடன் வாங்கிய நிலையில் அதில் 9 கோடி ரூபாய் இன்னும் பாக்கி உள்ளது. மேலும் கார்த்தி நடித்த ஜப்பான் படத்துக்கு ரீ பண்ட் தர வேண்டி பல கோடி ரூபாய் பாக்கி உள்ளது. இப்படி மொத்தம் 150 கோடி ரூபாய் வரை இந்த படத்தின் மீது கடன் உள்ளது.
இந்த படம் ஆரம்பத்த சில மாதங்களில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கும் இடையே மோதல் வந்து விட்டது. அதனால் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடல் இல்லாமல் இந்த படம் 32 மாதங்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளையும் சேர்த்தால் 35 மாதங்கள் வரை நடந்துள்ளது.
அந்த வகையில் 35 மாதங்களுக்கு இந்த படத்தை தயாரிக்க வாங்கிய கடனுக்கு பல கோடி ரூபாய்க்கு வட்டியே பலமடங்காக தயாரிப்பாளருக்கு பெருகி இருக்கும். கருப்பு படத்தின் மொத்த பட்ஜெட் 118 கோடி ரூபாய் என்ற நிலையில் 130 கோடி ரூபாய் வரை பட்ஜெட் அதிகரித்துள்ளது. இதற்கு இயக்குனர் ஆர்ஜே பாலாஜியும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளருக்கே ரூ. 10 கோடி சம்பளம் என்கின்றனர்.
இப்படி பல விதங்களில் கருப்பு படம் நிதி சிக்கல்களை சந்தித்துள்ளது. கடைசி நேரத்தில் படத்தின் நாயகன் நடிகர் சூர்யா இந்த படம் ரிலீஸாக ரூ. 30 கோடி கடன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஏற்கனவே கங்குவா படத்துக்கு இப்படிதான் 100 கோடி ரூபாய் கடனை சூர்யா ஏற்றார். இப்படி அவர் நடிக்கும் படங்களுக்கு கடன்களை ஏற்றுக்கொண்டு கடனாளியாக மாறி வருகிறார். ஒரு பெரிய ஸ்டார் படம் திட்டமிடப்படாமல் தயாரானால் இப்படிதான் சிக்கல்கள் ஏற்படும் என்று பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





