தமிழ் சினிமாவில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் சூர்யா சிங்கம் 2 படத்துக்கு பிறகு இப்போது 13 ஆண்டுகள் கழித்து கருப்பு என்ற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். கருப்பு படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் உலகளவில் மொத்தம் 207 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக நேற்று படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா வட மாநிலங்கள் உட்பட உலகம் முழுவதும் கடந்த ஏழு நாட்களில் இந்த அபாரமான வசூலை கருப்பு படம் எட்டி உள்ளது. உண்மையில் கருப்பு படத்தின் இந்த மாபெரும் வெற்றி நடிகர் சூர்யாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் குறிப்பாக சூர்யா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் பள்ளி கோடை விடுமுறை முடிய இன்னும் பத்து நாட்களே இருப்பதால் படத்தின் வசூலை இன்னும் அதிகரிக்க படக்குழு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நேற்று முதல் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் தமிழ்நாட்டில் பல்வேறு உள்ள ஊர்களில் கருப்பு படம் திரையிட்டுள்ள தியேட்டர்களுக்கு நேரில் சென்று படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.
கருப்பு படம் பார்க்க வந்த ரசிகர்களை சந்தித்து படம் குறித்து பேசி உற்சாகப்படுத்தி வருகின்றனர். நேற்று கோவை திருப்பூர் சேலம் ஈரோடு உள்ளிட்ட தியேட்டர்களுக்கு கருப்பு படக்குழு சென்றது. இன்றும் பல ஊர்களுக்கு படக்குழு செல்ல திட்டமிட்டுள்ளது. ஆனால் கருப்பு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் பிரஸ்மீட்டில் நடிகர் சூர்யா இதுவரை கலந்து கொள்ளவில்லை.
மதுரையில் நடந்த கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மட்டுமே நடிகர் சூர்யா பங்கேற்றார். ஆனால் அவர் தமிழக மக்களை குறிப்பாக தமிழ் மீடியாவை சந்தித்து இதுவரை கருப்பு படம் குறித்து பேசவில்லை. ஆனால் மும்பையில் சமீபத்தில் நடந்த ஜோதிகாவின் சிஸ்டம் என்ற இந்தி படத்தின் ஓடிடி வெளியீடு நிகழ்ச்சியில் தனது மனைவி மகன் மகள் என குடும்பத்துடன் கலந்துக்கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட நடிகர் சூர்யா அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். ஆனால் தமிழகத்தில் தனது படத்தின் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வது இல்லை. அதனால் தமிழ் ஊடகங்களை தமிழக மக்களை நடிகர் சூர்யா புறக்கணிக்கிறார் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும் கருப்பு படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் நிச்சயம் சூர்யா கலந்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





