நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகள் உட்பட அனைத்து படப்பிடிப்பு முடித்து விட்டதாகவும் படப்பிடிப்பு நிறைவுகளில் பூசணிக்காய் உடைத்து விட்டதாகவும் சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
ஆனால் சில காட்சிகள் மட்டும் பேட்ச் ஒர்க் காட்சிகளாக எடுக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த வாரத்தில் சென்னை ஈசிஆரில் நடந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பில் எலக்டரீசியன் தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒரு முக்கிய கேமியோ நடிகரின் போர்ஷன் விடுபட்டுள்ளதாகவும் அந்த படப்பிடிப்பு விரைவில் நடக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. வருகிற செப்டம்பர் 3ம் தேதி ஜெயிலர் 2 ரிலீஸ் என்கிற நிலையில் இது மட்டுமே பாக்கி என்றும் கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் நடிக்க முடியவில்லை. ஏற்கனவே கூலி படத்தில் ஷாருக்கானை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அவர் நோ சொன்னதால் அந்த ரோலில் இந்தி நடிகர் அமீர்கான் கூலி படத்தில் நடித்திருந்தார்.
கூலி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் அமீர்கான் நடித்த அந்த காட்சி ரசிகர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியது. உப்பு சப்பில்லாத அப்படி ஒரு கேரக்டரில் அமீர்கான் நடித்திருக்கவே வேண்டாம் என்றும் விமர்சனம் எழுந்தது. எனினும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக அந்த காட்சியில் அவருடன் இணைந்து நடித்தேன் என்று நடிகர் அமீர்கான் அதற்கு விளக்கமும் தந்திருந்தார்.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் நடிக்க மறுத்த நிலையில் தெலுங்கு நடிகர் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் அந்த கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. அவரும் தற்போது மறுத்துவிட்ட நிலையில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் அந்த கேமியோ ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் இந்தியில் மாஸ் ஹீரோ என்பதும் குறிப்பிடத்தக்கது.





