கடந்த 1999ம் ஆண்டில் வெளியான சேது படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலா. விக்ரம் நாயகனாக நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்துக்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமுக்கு ஒரு பெரிய அடையாளம் அங்கீகாரம் கிடைத்தது. பாலாவும் அதிக அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா நான் கடவுள் பிதா மகன் பரதேசி நாச்சியார் அவன் இவன் தாரை தப்பட்டை வணங்கான் ஆகிய படங்கள் வெளியாகின. இதில் கடைசியாக வெளியான சசிக்குமார் நடித்த தாரை தப்பட்டை அருண் விஜய் நடித்த வணங்கான் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 27 ஆண்டுகளான நிலையில் பாலா இதுவரை 10 படங்களை கூட இயக்கவில்லை. ஒவ்வொரு படத்துக்கும் 2 ஆண்டுகள் 3 ஆண்டுகள் என இடைவெளி விடுவதே இதற்கு முக்கிய காரணம். நடிகர்கள் சூர்யா விக்ரம் ஆர்யா விஷால் அதர்வா போன்றவர்களுக்கு இவரது படங்கள் பெரிய கவனத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தன.
இந்நிலையில் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப இளம் ரசிகர்கள் முதல் அனைத்து தரப்பினரும் மிகவும் விரும்பக்கூடிய வகையில் தனது அடுத்த படத்தை எடுக்க இயக்குனர் பாலா தயாராகி வருகின்றனர். வழக்கமான அவரது பாணியில் இருந்து மாறுபட்ட ஒரு படத்தை தர திட்டமிட்டுள்ளார்.
அதற்காக இயக்குனர்கள் மாரி செல்வராஜ் ஏஎல் விஜய் கொம்பன் பட இயக்குனர் முத்தையா மற்றும் ராஜூ முருகன் ஆகியோருடன் இணைந்து அடுத்த படம் குறித்த கதை விவாதத்தில் இயக்குனர் பாலா கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வருகிறார். விரைவில் பாலாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.
பாலா இயக்கிய படங்கள் எல்லாமே ஒரு விதத்தில் அவரது தனி பாணி படங்களாக இருந்தன. பெரும்பாலும் வாழ்வில் விளிம்பு நிலை மனிதர்கள், வறுமை மற்றும் குற்ற பரம்பரை சார்ந்த மனிதர்களின் வாழ்வியல் முறையை அவரது படங்கள் காட்டியிருந்தன. ஆனால் இந்த முறை 4 இயக்குனர்களின் ஒத்துழைப்புடன் அவரது கதை பாணியை மாறுபட்ட கோணத்தில் உருவாக்கி வருவதாக தெரிய வந்துள்ளது.





