இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் ஜெய்பீம். ஆனால் இந்த படம் கொரொனா தொற்று காலமாக இருந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அமோகமான வரவேற்பையும் பெற்றது.
அதன்பிறகு ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தையும் தசெ ஞானவேல் தான் இயக்கி இருந்தார். இதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்துக்கு பிறகு இயக்குனர் தசெ ஞானவேலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ழகரம் ஸ்டுடியோஸ் தான் தயாரிக்கிறது.
இந்த படம் டாக்டர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் 5 ரூபாய் டாக்டர் என்ற கேரக்டர் வரும். அவருடைய வாழ்க்கை கதைதான் சூர்யா நடிக்கும் பயோபிக் படமாக உருவாகிறது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 5 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் என்பவரது வாழ்க்கை கதை தான் அது.
ஆரம்பத்தில் 2 ரூபாய் டாக்டராக இருந்த திருவேங்கடம் விலைவாசி உயர்வு காரணமாக 5 ரூபாய் டாக்டராக மாறி இறுதி வரை அதே கட்டணத்தில் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து சிகிச்சை தந்துள்ளார். அவர் மறைந்து விட்ட நிலையில் அவரது வாழ்க்கையை டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் என்ற பெயரில் தசெ ஞானவேல் திரைப்படமாக உருவாக்குகிறார்.
இந்த படத்தில் 5 ரூபாய் டாக்டராக சூர்யா நடிக்கிறார். டாக்டர் திருவேங்கடம் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை கதைக்களமாக கொண்டு அவரது வாழ்க்கையை இந்த படத்தில் திரையில் கொண்டு வருகிறார் தசெ ஞானவேல். ஏற்கனவே வெளியான அமரன் பராசக்தி பயோபிக் படங்கள் வரிசையில் இந்த படமும் இணைய உள்ளது.





