தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். மேலும் இதில் சந்தீப் கிசான், சிவராஜ்குமார் போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

“கேப்டன் மில்லர்” படப்பிடிப்பு முதலில் தென்காசி பகுதியில் நடைபெற்று வந்தது. அங்கே நீர் நிலைகள் இருக்கும் பகுதிகளில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆதலால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு அனுமதி இல்லாமல் நடப்பதாக கூறி தடை விதித்தார். எனினும் அதன் பின் உரிய அனுமதி பெற்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.
அதனை தொடர்ந்து தற்போது மதுரை பகுதிகளில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது தனுஷ் காலை நேரத்தில் தெருக்களில் ஜாக்கிங் போகும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தனுஷ் தெருவில் காண்போருக்கு எல்லாம் வணக்கம் வைத்துக்கொண்டே ஜாக்கிங் செல்கிறார். தற்போது இந்த வீடியோ தனுஷ் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
🔥🔥🔥 #CAPTAINMILLER @dhanushkraja pic.twitter.com/rrjnvLoI0t
— Dhanush Trends ™ (@Dhanush_Trends) June 3, 2023
“கேப்டன் மில்லர்” திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இத்திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கேப்டன் மில்லர்” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் தனது 50 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரித்து நடிக்கப்போகிறார். மேலும் ஷேகர் கம்முலா என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கும் திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.





