இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லி. அவருடன் பல படங்களில் பணிபுரிந்த நிலையில் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அட்லி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர்யா ஜெய் நயன்தாரா நஸ்ரியா சத்யராஜ் சந்தானம் சத்யன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி மெர்சல் மற்றும் பிகில் என 3 படங்களை அடுத்தடுத்து அட்லி இயக்கினார். இந்த 3 படங்களுமே மாஸ் ஹிட் படங்களாக அமைந்து அட்லிக்கு பெரிய வெற்றிகளை கொடுத்தது. இதையடுத்து இந்தியில் ஷாருக்கன் நடிப்பில் ஜவான் என்ற படத்தை அட்லி இயக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்த படமும் 1150 கோடி ரூபாய் வசூலித்தது. மேலும் சிறந்த நடிகர் தேசிய விருதையும் ஷாருக்கானுக்கு பெற்றுத் தந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து இப்போது ஒரு படத்தை இயக்க 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக அட்லி மாறியிருக்கிறார். அடுத்தாக அட்லி இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ. 250 கோடி என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஜான்வி கபூர் தீபிகா படுகோனே ராஷ்மிகா மந்தனா உள்பட 5 நாயகிகள் நடிக்கின்றனர். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சயன்டிபிக்சன் கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. இதுவரை வெளியான படங்களிலேயே இந்த படம் வேற லெவலில் உருவான ஒரு படமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமாக இந்திய சினிமாவில் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் படங்கள் பான் இந்தியா படங்களாக தான் இருக்கின்றன. ஆனால் அட்லி இயக்கும் இந்த படம் உலகளாவிய ஒரு படமாக உருவாகிறது. அதாவது ஹாலிவுட் திரைப்படமாக இந்த படத்தை அட்லி உருவாக்க திட்டமிட்டுள்ளார். வார்னே பிரதர்ஸ் என்ற வெளிநாட்டு ஹாலிவுட் நிறுவனம் மூலம் படத்தை தயாரித்து வெளியீடு செய்யப் போவதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.
ஹாலிவுட் ரேஞ்சில் முதன் முறையாக படம் இயக்கும் தமிழ் இயக்குனர் அட்லி என்ற பெருமை, கோலிவுட்டுக்கு இந்த படம் மூலம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. திறமை மற்றும் உழைப்பால் தனது 6வது படத்தையே ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாக்க திட்டமிட்டு அதற்காக பணிசெய்து வரும் அட்லி குறித்து அறிந்த கோலிவுட் வட்டாரம் அதிர்ச்சியில் திகைத்து போயுள்ளது.





