கடந்த டிசம்பர் 5ம் தேதி துரந்தர் படம் வெளியானது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த துரந்தர் படங்களின் பிரமாண்ட வெற்றியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கொண்டாடினார். சற்று தொய்வடைந்திருந்த பாலிவுட் சினிமாவுக்கு ஜியோ ஸ்டுடியோ தயாரிப்பில் உருவான துரந்தர் படம் மீண்டும் பலத்தை கொடுத்துள்ளது.
துரந்தர் படத்தின் இணை தயாரிப்பாளர்களுக்கு முகேஷ் அம்பானி எழுதியுள்ள கடிதத்தில் ஜியோ ஸ்டுடியோஸ்சின் சாதனைகளை குறிப்பிட்டு துரந்தர் இந்திய திரையுலகில் ஒரு புதிய மைல் கல் என்று பாராட்டியுள்ளார். மேலும் அம்பானி கூறுகையில், தொடர்ந்து 3 ஆண்டுகளாக மிக அதிக வசூல் செய்த படங்களை வழங்கி திரையுலகில் தன் அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.
2024ல் வெளியான ஸ்திரி2 2025ல் வெளியான துரந்தர் மற்றும் 2026ல் வெளியான துரந்தர் தி ரிவெஞ்ச் ஆகிய படங்களால் இந்த அரிய சாதனை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக துரந்தர் தொடரின் 2 பாகங்களும் உலகளாவிய வசூல், வெளியீட்டு உத்தி மற்றும் ரசிகர்கள் வரவேற்பில் புதிய உலகளாவிய சாதனைகளை படைத்துள்ளன. இந்த 2 படங்களும் இணைந்து 3100 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது.
மேலும் உலகளவில் ஒரே நேரத்தில் 2 பாகங்களாக திட்டமிட்டு ஒன்றாகவே படமாக்கி மிகக் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியான முதல் திரைப்பட தொடர் இதுதான். துரந்தர் முதல் பாகம் இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது. 15 வாரங்கள் திரையரங்குகளில் ஓடிய நிலையில் வெளியான இதன் 2ம் பாகம் தற்போது முதல் பாகத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது என்றும் முகேஷ் அம்பானி பெருமிதமாக அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.
இருப்பினும் அம்பானியின் இந்த கருத்துக்கு சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மாற்று கருத்துக்களும் எழுந்துள்ளன. இதற்கு முன்பே பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் பாகம் 1 மற்றும் 2 படங்கள் ஒன்றாகவே படமாக்கப்பட்டு சில மாத இடைவெளியில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின என்பதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாலிவுட் இயக்குனர் ஃபர்கான் அக்தார் இயக்கத்தில் நடிக்க இருந்த டான் 3 திரைப்படத்திலிருந்து ரன்வீர் சிங் திடீரென விலகிய முடிவு பாலிவுட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வெஸ்டர்ன்ஸ் இந்தியா சினி எம்ப்ளாயி ஃபெடரேஷன் அமைப்பு ரன்வீர் சிங்குக்கு எதிராக தடை விதித்தது. ஆனால் தற்போது பிற திரையுலக அமைப்புகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு அந்த அமைப்பு ரன்வீர் சிங்குக்கு எதிரான தடையை வாபஸ் பெற்றுள்ளது.





