நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அனலை பரப்பிக் கொண்டு இருக்கிறார். வருகிற தேர்தலில் திமுக அதிமுக என்ற 2 கட்சிகளுக்கும் தவெக கட்சி ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே வருகிற சட்டசபை தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் போட்டியே என்று நடிகர் விஜய் அதிரடியாக பேசி வருகிறார். மேலும் தவெக மேடைகளில் ஆளும் கட்சியான திமுக குறித்து தான் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவருமே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில் சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் முடங்கி போயுள்ளது. கோர்ட் வழக்கில் சிக்கிய அந்த படம் ஒருவழியாக ரீவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோர்ட் வழக்கை தயாரிப்பு நிறுவனம் வாபஸ்சும் வாங்கி விட்டது.
இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்த ஜனநாயகன் படம் வரும் 19 அல்லது 20ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் நடிகர் விஜய், மேடைகளில் பேசும் போது ஊழலை ஒழிப்பேன் என்கிறார். ஆனால் அவர் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும்போது டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுகிறதே என்று தவெக கட்சி நிர்வாகிகளில் ஒருவரான அருண்ராஜிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதுபோன்ற தியேட்டர் விதிமீறல்களை தவறுகளை கண்காணித்து தடுக்க வேண்டிய அரசின் பொறுப்பு, அது அவர்களுடைய வேலை என்று கூறினார்.
இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வாய்மொழி உத்தரவு அதிகாரிகளுக்கு போடப்பட்டுள்ளது. ஜனநாயகன் படம் ரிலீஸாகி தியேட்டர்களில் ஓடும்போது அங்கு ஒரு டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலும் உடனடியாக அந்த தியேட்டருக்கு சீல் வையுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் தியேட்டர்காரர்களுக்கு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.





