நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் தனக்கான ஸ்டைலை புதுமைகளை எப்போதுமே விட்டுத் தராதவர். ஆனால் அவர் நடித்த படங்களில் தனது நண்பர்களுக்காகவும் சில விஷயங்களை செய்துள்ளார். முக்கியமாக இவர் இயக்கிய படங்களாக இருந்தாலும், பிற இயக்குனர் இயக்கத்தில் அவர் நடிக்கும் படங்களாக இருந்தாலும் தனது நெருங்கிய நண்பர் கிரேஸி மோகனை தவறாமல் பயன்படுத்திக் கொள்வார்.
குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடித்த ஐந்து படங்களில் தொடர்ந்து ஹீரோயின்களுக்கு ஒரே பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜானகி என்ற இந்த பெயர் கமல் நடித்த படங்களில் தொடர்ந்து வந்துள்ளது. அதாவது பம்மல் கே சம்பந்தம் படத்தில் சிம்ரன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சினேகா, காதலா காதலா படத்தில் ரம்பா, அவ்வை சண்முகி படத்தில் மீனா, தெனாலி படத்தில் ஜோதிகா என அனைவருக்குமே ஜானகி என்ற பெயர்தான் இருக்கும்.
ஒருவேளை நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய தோழிகள் அல்லது உறவினர் யாரேனும் இந்த பெயரில் இருப்பார்களோ என்றுதான் பலரும் யோசித்து வந்தனர். இது தனது நண்பர் கிரேஸி மோகனின் நட்புக்காக செய்யப்பட்ட ஒரு விஷயம் என்பது பின்னாளில் தான் தெரிய வந்தது.
திரைப்பட வசனகர்த்தாவான கிரேஸி மோகன் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். குறிப்பாக கமலுடன் பம்மல் கே சம்பந்தம் மைக்கேல் மதன காமராஜன் அபூர்வ சகோதரர்கள் பிரபு நடித்த சின்ன வாத்தியார் சிகாமணி ரமாமணி என படங்களில் கிரேஸி மோகன் நடித்தும் இருக்கிறார்.
நடிகர் கமலுடன் படத்தில் வேலை செய்யும் பொழுது எந்த கதாபாத்திரத்திற்கு வசனம் எழுதினாலும் சம்பளம் வாங்குவதற்கு முன்பே ஜானகி என்ற பெயரை வைக்குமாறு அவர் கேட்டு விடுவது வழக்கம். அதற்கு பல இயக்குனர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் கமல் மட்டும் உடனே ஒப்புக்கொண்டு விடுவார்.
எதற்காக என்றால் கிரேஸி மோகனின் ஆசிரியர் பெயர் ஜானகி. அவரால்தான் படித்து இந்த நல்ல நிலைமைக்கு வந்தோம் என்று தனது வாழ்வில் வெற்றி பெற்ற பிறகும் சினிமாவில் அவரது பெயரை கிரேஸி மோகன் பயன்படுத்தி உள்ளார். அதற்கு கமல் எந்த மறுப்பும் இன்றி அவரது படங்களில் பயன்படுத்தி வந்துள்ளார். நட்புக்காக தனது படங்களில் ஒரே பெயரை பயன்படுத்துவது என்பது பெரிய விஷயம். அத்துடன் கிரேஸி மோகன் வசனம் எழுதிய பல படங்களில் நாயகி பெயர் ஜானகியாக தான் இருக்கும். இதேபோல் சுந்தர் சி படங்களில் மாயா, அர்ஜூன் படங்களில் அஞ்சலி போன்ற பெயர்கள் உள்ளன.





