நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் கடந்த சனிக்கிழமை அன்று வாழ்த்து தெரிவித்திருந்தார். நார்வேயில் நடைபெற்ற புகழ்பெற்ற செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்று, அந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார்.
அதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் நார்வே தலைநகர் ஆக்ரோவில் நடந்த நார்வே செஸ் 2026 தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரே தொடரில் சேம்பியன் மாக்னஸ் கார்ல்செனை 2 முறையும் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனை படைத்திட எனது வாழ்த்துக்கள் என்று முதல்வர் விஜய் அந்த பதிவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தலைமை செயலகத்துக்கு நேரில் அழைத்த முதல்வர் விஜய் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டினார். மேலும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பின் போது தலைமை செயலகத்தில் தனது அறையில் முதல்வர் விஜய் பிரக்ஞானந்தாவுடன் சிறிது நேரம் செஸ் விளையாடினார். இது இணையத்தில் வைரலானது. இதுகுறித்து கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா கூறியதாவது, நார்வே செஸ் தொடரில் வெற்றி பெற்று பதக்கம் பெற்றதை கேள்விப்பட்ட முதல்வர் விஜய் என்னை நேரில் வருமாறு அழைத்திருந்தார். முதல்வர் விஜய் செஸ் போர்டு எடுத்து வந்து இருக்கீங்களா என்று கேட்டார்.
ஆமாம் என்றேன். அவரது அறையில் செஸ் போர்டு வைத்து அவருடன் விளையாடினேன். முதல்வர் விஜய் நன்றாக விளையாடினார். இறுதியில் நான் வெற்றி பெற்றேன். சுமார் 15 நிமிடம் விளையாடினோம். நீங்கள் எவ்வளவு நாளாக செஸ் விளையாடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் நண்பர்களுடன் செஸ் விளையாடுவேன் என்றார். அவருடன் விளையாடியது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று பிரக்ஞானந்தா கூறினார்.





