நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 75 ஆண்டுகள் பராம்பரியம் கொண்ட திமுகவும் 55 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அதிமுகவும் பலத்த தோல்வியை சந்தித்த நிலையில், கட்சி துவங்கி 2 ஆண்டுகளை மட்டுமே நிறைவு செய்த தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் தனித்து நின்று வென்று
ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.
அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இப்போது தமிழக முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் விஜயின் ஒரு மாத ஆட்சி காலத்தில் முதல்வர் விஜய் எடுத்த சில நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டை வரவேற்பை பெற்றுள்ளன.
எனினும் சில தரப்பினர் எதிர்மறை விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக நடித்து வருபவர் நடிகர் சாய் தீனா. குறிப்பாக வில்லன் கேரக்டரில் அவர் அதிகமாக நடித்து வருகிறார். அவர் நடித்த படங்களில் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தில் மீசை பத்மா என்ற கேரக்டரில் அவரது வில்லன் நடிப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
விருமாண்டி புதுப்பேட்டை எந்திரன் கொம்பன் மெர்சல் தெறி பிகில் கொடிவீரன் அண்ணனுக்கு ஜே மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் சாய் தீனா நடித்திருக்கிறார். வில்லனாக அல்லது வில்லன் குரூப்பை சேர்ந்த அடியாளாக அவர் நடித்திருந்தாலும் அவரது நடிப்பு தனித்து தெரியும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வில்லன் நடிகர் சாய்தீனா கூறியதாவது, நாம் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறோம். நானே சினிமாக்காரன் என்று நான் பேசினதும் நீங்கள் எல்லாம் கை தட்டுறீங்க. சினிமா மோகம் ரொம்பவும் ஆபத்து. என்னன்னு தெரியாம போய் ஓட்டு போட்டு இருக்கீங்க. அது ரொம்ப ஆபத்து.
நம்ம முன்னாடி இருக்கிறவனை புகழ்ந்து பேசி மேலே கொண்டு போய் உட்கார வைத்து அவனைக் கெட்டது செய்ய வைக்கிற முதல் ஆள் நாமதான். அது மாதிரி போடக்கூடாது. யார் யார் வரப்போறாங்க. அவங்களை பத்தி தெரிஞ்சுக்கணும். உங்க முன்னாடி நிற்கிற நடிகனை பார்த்து கை தட்டாதே. யார் நிற்கிறார்கள் என்று பார்த்து கைதட்டினால் 100 வருஷம் பின்னாடி தான் போவோம் என்று நடிகர் சாய் தீனா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





