நடிகர் விஜய் இப்போது அரசியல் களத்தில் அனல் கிளப்பிக்கொண்டு இருக்கிறார். விக்கிரவாண்டியில் கடந்தாண்டு தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிக்ரகமாக நடத்திக் காட்டினார். இந்த ஆண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் 2வது அரசியல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார்.
இப்போது அடுத்தகட்டமாக மாவட்டம் வாரியாக மக்களை நேரில் சந்திக்க வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் வாரத்தில் திருச்சி அரியலூர் மாவட்டங்களுக்கு சென்ற விஜய், 2வது வாரத்தில் நாகை திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.
நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அவர் போகிற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கேப்டன் விஜயகாந்த் ஆகியோருக்கு பிறகு காசு கொடுக்காமல் பிரியாணி குவாட்டர் என்று தராமல் தானாக கூடுகிற பெரிய மக்கள் கூட்டம் அது நடிகர் விஜய்க்கு மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் டப்பிங் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளன. விஜய் மட்டும் 2 நாட்கள் ஒதுக்கி டப்பிங் பேச வேண்டும். வருகிற 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்வது உறுதியாகி விட்டது. இந்த படத்துடன் சூர்யா நடித்த கருப்பு படமும் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற டிசம்பர் மாதம் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு விஜய் நடித்த லியோ மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படங்களின் இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை. மேலும் இது விஜய்க்கு கடைசி படம் என்பதால் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக மலேசியாவில் நடத்த உள்ளனர்.
இந்த சூழலில் ஜனநாயகன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாக உள்ளது. வருகிற தீபாவளியன்று பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதுவும் நடிகர் விஜய் பாடிய பாடலையே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கின்றனர். அதனால் தளபதி ரசிகர்களும் தவெக தொண்டர்களும் இந்த தீபாவளி ஜனநாயகன் பாடல் தீபாவளி என்று இப்போதே உற்சாகமாகி விட்டனர்.





