கடந்த 1989ம் ஆண்டு இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் அபூர்வ சகோதரர்கள். இந்தப் படத்தில் கமல் 3 வேடங்களில் நடித்திருந்தார். அதில் ஒருவர் குள்ளமாக இருப்பார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். படத்தில் கௌதமி ரூபிணி நாகேஷ் மனோரமா நாசர் ஸ்ரீவித்யா டெல்லி கணேஷ் மௌலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் குறித்து நடிகர் கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, வாலி சார் ஒரு பாடலை எழுதினார். அந்தப் பாடல் வரிகளில் சிங்கீதம் சீனிவாச ராவ்க்கு திருப்தி இல்லை. வாலி வீட்டுக்கு வருகிறார். 2 முறை பாடல் எழுதுகிறார். ஆனால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கலாமே என்று சிங்கீதம் கூறினார்.
அதை நான் வாலியிடம் கூறினேன். யோவ் சிங்கீதம் சீனிவாச ராவ் தெலுங்கு. அவருக்கு எப்படி தமிழ் பாட்டு வரி புரியும்? என்று கேள்வி எழுப்பினார். உடனே நான், சார் எப்படியிருந்தாலும் அவர்தான் இயக்குநர். அவருக்கு மொத்தமும் தெரியும் என்றேன். உடனே வாலி, யோவ் நான் என்ன வாலியா? வாலிபாலா. அவரு ஒரு தட்டு தட்றாரு. நீ ஒரு தட்டு தட்றே? என்றார்.
வாலி கோபித்துக்கொண்டு நீயே பாட்டை எழுதிக்கோ என்றார். இல்ல சார் நீங்கதான் எழுதி ஆகணும் என்றேன். அப்படி உருவான பாடல்தான் உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே பாடல். அந்தப் பாடலுக்காக மாநில அரசின் விருது பெற்றார் வாலி. பெரும்பாலும் மிகவும் அரிதாக தான் சோக பாடல்கள் ஹிட்டாகும். அதை ஹிட்டாக்கி காட்டியவர் இளையராஜா.
குறிப்பாக அதன் வரிகளும் பேசப்பட்டது. அதற்கு காரணம் வாலி என்று அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன் பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். மனதுக்கு ஆறுதல் கொடுக்கும் பாடலாக இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த பாடலில் அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும். வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் போன்ற வரிகள் அழுத்தமாக எழுதப்பட்டிருக்கும். கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன், காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன் என வாலி தனது வைர வரிகளை பாடலில் பதிவு செய்திருப்பார். இன்றும் சோக பாடல்களில் இந்த பாடலுக்கு முக்கிய இடம் கிடைத்து வருகிறது.





