நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல. அவரது சொந்த வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் பல கடுமையான விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும் ஒரு சினிமா கலைஞனாக அவரது உழைப்பும், பங்களிப்பும், சினிமா வளர்ச்சிக்கு அவர் பட்ட பாடுகளும் மற்றவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல் சிறப்பாக நடித்திருந்தார் என்று அந்த படத்தை கடுமையாக விமர்சித்த யாருமே மறுக்கவில்லை. ஆனால் அவரது நடிப்பு, திரைக்கதையில் படம் சரியாக நிற்காததால் ரசிகர்களிடம் எடுபடாமல் போய்விட்டது என்பதே இங்கு கசப்பான உண்மை.
இந்தியன் 2 படத்துக்கு நேர்ந்த அதே கசப்பான அனுபவம்தான், கங்குவா படத்திலும் நடிகர் சூர்யாவுக்கும் நடந்திருக்கிறது. கங்குவா படத்தை பொருத்தவரை நடிகர் சூர்யா, அவரது கேரக்டருக்காக தனது உயிரை கொடுத்து அதிகமாக கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் படத்தில் கதை இல்லாததால் ரசிகர்கள் ஏமாந்து போனதே உண்மை.
அதனால்தான், நடிகர் சூர்யா விஜய் டிவியில் நடத்திய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, கோடீஸ்வரன் நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதே போல் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியும் கடந்த 7 ஆண்டுகளாக பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது.
ஆனால் இப்போது விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். ஆனால் கமல் அளவுக்கு இவரால் பேச்சாற்றலால் பார்வையாளர்களை கவர முடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்த பார்க்காதவர்கள் கூட சனி, ஞாயிறு தினங்களில் கமலுக்காக அந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சி மாநில துணைத்தலைவர் கோவையை சேர்ந்த தங்கவேலு கூறுகையில், அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப பயிற்சி படிப்புக்காக கமல்ஹாசன் சென்றதால் அவரால் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை பங்கேற்க முடியவில்லை. அடுத்த ஆண்டில் நடக்கும் பிக்பாஸ் சீசனில் மீண்டும் தொகுப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது, என்று உறுதியாக கூறியிருக்கிறார்.





