இயக்குனர் சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 2வது படம் நுாறு சாமி. இந்த படம் வருகிற 19ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் சென்னையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய் ஆண்டனி சசி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின் கலந்துக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி இயக்குனர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. எப்போதும் ஒரு தாயுள்ளத்தோடு பார்க்கக் கூடியவர் சசி. ஆண்களிடம் இருக்கும் பெண்மைதன்மையை பார்த்து நான் அதிசயப்படுவேன்.
பெண்தன்மை அதிகமாக இருக்கும் மனிதர்கள் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த நூறு சாமி படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு எனக்கு அழைத்து எனக்காக ஒரு 2 மணி நேரம் உன் அலுவலகத்தை விட்டு உன்னால் வெளியே போக முடியுமா? என கேட்டார். பிறகு நானும் வெளியே போய் விட்டேன்.
என் உதவி இயக்குனர்களிடம் இந்த கதையை சொன்னார். அவர் போன பிறகு 10 நாட்களுக்கு இந்த கதையைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இந்த படத்தை பார்த்துவிட்டு 3 நாட்கள் இதைப்பற்றி என் உதவி இயக்குனர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன். இப்போது நான் நிறைய படம் பார்ப்பதில்லை.
நான் பார்க்கும் படம் நல்ல படமாக இல்லை என்றால் எனக்கு காய்ச்சல் வந்துவிடும். என்னால் படமே எடுக்க முடியாது. நல்ல படம் பார்த்தால் தான் எனர்ஜி கிடைக்கும். இந்த சமுதாயத்தின் விதியை எழுதிய ஆண்கள் இந்த சமூகத்தின் சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள், பெண்களை எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் நூறு சாமி படம் பேசுகிறது. நான் விஜய் ஆண்டனியின் எந்த படத்தையும் பார்த்தது கிடையாது.
பிச்சைக்காரன் படம் ஹிட் ஆன போது சசிக்கு கால் பண்ணி படம் பயங்கர ஹிட்டாமே? என வாழ்த்தினேன். அப்போது அவர், எல்லாம் சரி நீ படத்தை பார்த்திடாதே. அவ்வளவு நல்ல படம் கிடையாது என்றார். ஒரு நடிகர் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் போது தன்னையே அவர் புரிந்துகொள்கிறார். அப்படி இந்த படத்தில் உங்களை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் விஜய் ஆண்டனி என்று இயக்குனர் மிஷ்கின் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.





