இயக்குனர் பாரதிராஜா 3 தினங்களுக்கு முன்பு 84 வயதில் காலமான நிலையில் அவரது மறைவின் சோகம் இன்னும் ரசிகர்களின் மனதை விட்டு அகலவில்லை. பல சூப்பர் ஹிட் படங்களை தந்த இயக்குனர் பாரதிராஜா ஒரு கட்டத்துக்கு பிறகு பல படங்களில் நடித்தும் இருக்கிறார். ஆரம்பத்தில் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் இயக்குனராகவே அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்ம வீட்டுப் பிள்ளை ஆயுத எழுத்து திருச்சிற்றம்பலம் ராக்கி குரங்கு பொம்மை மகாராஜா பாண்டியநாடு மலையாளத்தில் தொடரும் உள்ளிட்ட பல படங்களில் பாரதிராஜா குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு தாத்தா கேரக்டரில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார்.
மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் தொடரும் என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த இயக்குனர் பாரதிராஜா அடுத்து கடைசியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் புலவர். இந்த படத்தை இயக்குனர் முருகைய்யா என்பவர் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை கடந்தண்டு ஆகஸ்ட் மாதம் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் வெளியிட்டார்.
டார்க் காமெடி பானியில் தயாரான இந்த படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, புலவர் படம் தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. இந்த படம் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் குற்றவாளிகளை எப்படி கையாளுகிறார் என்பதைப் பற்றிய மையக்கதையின் உருவானது.
அந்த கேரக்டரில் நடிப்பதற்கு நல்ல அறிவும் சிந்தனையும் கொண்ட ஒருவர் தேவைப்பட்டார். அதற்கு இயக்குனர் பாரதிராஜா தான் சரியாக இருப்பார் என்றும் எங்களுக்கு தோன்றியது. அவர் உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்னதாக நாங்கள் படப்பிடிப்பையும் டப்பிங் வேலையையும் செய்து முடித்துவிட்டோம். படம் வெளியீட்டுக்காக காத்திருந்தோம். அப்போதுதான் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில் பாரதிராஜாவிடம் ஆசி பெறுவதற்காக இந்த வாரம் நாங்கள் அவரை சந்திக்க திட்டமிட்டு இருந்தோம். அவர் குணமடைந்து திரைப்பட வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம். இந்த படம் கடந்த வாரம் நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது என்று தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் கூறியிருக்கிறார். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் முத்திரை பதித்த பாரதிராஜாவின் கடைசி படம் புலவர் வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.





