தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை கௌதமி. ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு கார்த்திக் சரத்குமார் ராம்கி ராமராஜன் என்று அன்றைய முன்னணி நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். குறிப்பாக ரஜினி கமல் நடித்த பல படங்களில் கௌதமி நடித்துள்ளார்.
குறிப்பாக தர்மதுரை பணக்காரன் அபூர்வ சகோதரர்கள் தேவர் மகன் சந்தனக்காற்று நம்ம ஊரு பூவாத்தா எங்க ஊரு காவல்காரன் ருத்ரா என பல படங்கள் கெளதமிக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன. திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயான நிலையில் கௌதமி கணவரை பிரிந்தார். அவரது மகள் சுப்புலட்சுமியுடன் இருந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
பிறகு அந்த நோயுடன் போராடி மீண்டு வந்த கௌதமி, சில காலம் நடிகர் கமலுடன் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் இருந்த நிலையில் அவரை விட்டும் பிரிந்தார். பிறகு பாஜக கட்சியில் இருந்த அவர் அங்கிருந்த சில நிர்வாகிகள் தன்னை ஏமாற்றி சொத்துகளை அபகரித்ததால் அங்கு இருந்து விலகி அதிமுகவில் இருந்து வந்தார்.
அதிமுக கட்சியில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்து வந்த நடிகை கெளதமி, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, இன்று முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் விலகிக்கொள்கிறேன்.
தற்போது உள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன். கட்சியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் என அனைவரையும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை கட்சியில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன் என்று நடிகை கௌதமி அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார்.
சமூக சேவை செய்யும் எண்ணத்தில் நடிகை கௌதமி விலகி கொள்வதாக அறிவித்து இருந்தாலும் அதிமுகவில் உள்ள இப்போதைய உட்கட்சி பூசல், தலைமை நிர்வாகிகள் மோதல் காரணமாக விரக்தியடைந்த கௌதமி அந்த கட்சியை விட்டு விலகியுள்ளார். விரைவில் விஜய் கட்சி அல்லது அண்ணாமலை கட்சியில் அவர் சேரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





