கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் வெளியானது. நடிகர் விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்த தி கோட் படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 385 கோடி என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை 460 கோடி ரூபாய்க்கு மேல் தி கோட் படம் வசூலித்துள்ளது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று தி கோட் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. தி கோட் படம் தியேட்டரில் வெளியான போது கிளைமாக்ஸ் காட்சிகளில் குழப்பம் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக கடைசியில் வரும் மூன்று விஜயில் எந்த விஜய் குளோனிங் என்று படம் பார்த்த பலருக்கும் புரியவில்லை.
அந்த விமர்சனம் குறித்து பதிலளித்து பேசிய படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, படத்தில் சில காட்சிகளை நீளம் காரணமாக வெட்டி எடுத்து விட்டோம். தியேட்டர்களில் 3 மணி நேரம் ஓடிய தி கோட் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் என்று தெரிவித்திருந்தார். அதாவது 40 நிமிடங்கள் கூடுதலாக ஓடிடி தளத்தில் படம் ஓடும் என்று வெங்கட் பிரபு உறுதியளித்திருந்தார்.
ஆனால் இன்று ஓடிடி தளத்தில் 5 மொழிகளில் வெளியான தி கோட் படம், தியேட்டரில் ஓடியது போலவே அதே 3 மணிநேர படமாகத்தான் ஓடுகிறது. அகற்றப்பட்டதாக வெங்கட்பிரபு கூறிய எந்த புதிய காட்சிகளும் இதில் வரவில்லை. இதுகுறித்து இப்போது வெங்கட் பிரபு அளித்துள்ள விளக்கத்தில் டைரக்டர்ஸ் கட் வேண்டும் என்றால் லோட்டா விஎப்எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து முடிவுற்ற பிரதியை பெற வேண்டும்.
அவற்றை டெலிட்டட் காட்சிகளாகவோ அல்லது அதில் அதைப்பிறகு ஓடிடி காட்சிகளில் சேர்க்கவோ இதுகுறித்து என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திடம் பேசுகிறேன். இப்போதைக்கு இந்த பதிப்பை என்ஜாய் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு. அவர் முன்பு கூறியது போல, கூடுதலாக 40 நிமிட காட்சிகளை விஎப்எக்ஸ் நிறுவனத்தில் இருந்து பெற, தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்ய வேண்டும்.
அதன் வேலை முடிந்ததா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம்தான் சொல்ல வேண்டும். அதற்கு கூடுதல் செலவாகும் என்றால், அதை தயாரிப்பு நிறுவனம் செலுத்துமா என்பதும் கேள்வியாக உள்ளது. தி கோட் படம் வெளியான போது ரசிகர்களிடம் 40 நிமிட காட்சிகளை வெட்டியதாக சமாளித்த வெங்கட் பிரபு, இப்போது ஓடிடி தளத்தில் அந்த 40 நிமிட காட்சிகள் வராததற்கு மீண்டும் ஒரு காரணத்தைச் சொல்லி சமாளித்து இருக்கிறார். இது விஜய் ரசிகர்களை கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளது.





