நடிகர் சியான் விக்ரம் நடித்த படம் துருவ நட்சத்திரம் இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் டைரக்ட் செய்து இருக்கிறார் கடந்த 2017ம் ஆண்டில் உருவான இந்த படம் 9 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கிறது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இந்த படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. ஸ்பை – த்ரில்லர் படமான துருவ நட்சத்திரம் எப்படியும் ஜூன் 15ம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இயக்குனர் கௌதம் மேனனும் ஜூன் 15ம் தேதிக்குள், அதாவது இன்றைக்குள் இந்த படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று முனைப்பாக இருந்தார். ஆனால் இப்போது இன்று துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாது என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் மேலும் 30 நாட்கள் கால அவகாசம் கேட்டு இயக்குனர் கௌதம் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நிலுவையில் இருந்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் நிதிச் சிக்கல்களுக்கு ஒரு தீர்வை கொண்டு வந்தார். அதன்படி படக்குழுவினர் கொண்டாடுவோம் எண்டர்டெய்மென்ட் என்ற பெயரில் ஒரு பிரதியாக வங்கி கணக்கை தொடங்கி படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அதன் மூலமாகவே கடன்காரர்களுக்கு செலுத்த வேண்டும்.
இந்த நிபந்தனையுடன் வரும் ஜூன் 15ம் தேதிக்குள் அதாவது இன்று வரை படத்தை வெளியிட அனுமதி அளித்தார். மேலும் ஜூன் 15ம் தேதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாவிட்டால் கூடுதல் அவகாசம் கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கௌதம் மேனனுக்கு தனி நீதிபதி அனுமதி வழங்கி இருந்தார். தற்போது நீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் திட்டமிட்டபடி துருவ நட்சத்திரம் படத்தில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இயக்குனர் கௌதம மேனன் தெரிவித்துள்ளார்.
எனவே துருவ நட்சத்திரம் படம் வெளியீட்டை வரும் ஜூலை 15ம் தேதி வரை ஒரு மாத காலம் நீட்டிக்க கோரி அவர் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த விண்ணப்பம் உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. தனிநீதிபதி இந்த படத்தை வெளியிட அனுமதித்த உத்தரவை எதிர்த்து இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை ஜூன் 2ம் தேதி விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்திருந்தது.
தற்போது கௌதம மேனனின் கால அவகாச மனு விசாரணைக்கு வரும் இந்த சூழ்நிலையில் இன்று அந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்பையும் அந்த நீதிமன்ற அமர்வு அறிவிக்க உள்ளது. 9 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் தியேட்டருக்கு வருமா? என்பது இன்று நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை பொருத்தே அமையும். அதனால் இன்றைய நீதிமன்ற தீர்ப்பை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து கா்திருக்கின்றனர்.





