இயக்குனர் பாரதிராஜா பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இளையராஜா கங்கை அமரன் வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் 1980களில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். அவர்களுக்குள் வாடா போடா என பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமான நட்பும் உரிமையும் இருந்துள்ளது. மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியம் பாரதிராஜா இருவருக்கும் இடையே ஆழமான நட்பும் இருந்துள்ளது. ஆனால் ஜாம்பவான்கள் இருவருமே தற்போது நம்மிடையே இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழா நிகழ்ச்சியில் பேசிய பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கூறியதாவது, பாரதிராஜா ஆரம்பத்தில் சில நாடகங்கள் போடும் போது சில பாடல்கள் பாட என்னை கூப்பிட்டார். அப்போது வாய்யா போய்யா என்று பேசிக்குவோம். அப்போது வாடா போடா என்று பேசுவது இல்லை என்றாலும் ரொம்ப நட்போட இருந்தோம்.
சில நாடகங்களுக்கு நான் ப்ளூட் கூட வாசித்திருக்கிறேன். ரீ ரிக்கார்டிங்கில். அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். 16 வயதினிலே படத்தை முதலில் நாங்கள் தான் தயாரிப்பதாக இருந்தது. அவகாசம் இல்லை. அதில் அவர் எனக்கு ஒரு கேரக்டரும் கொடுக்க வேண்டியது இருந்தது.
அந்த படத்தில் வருகிற டாக்டர் கேரக்டர் என்னை தான் பண்ண வைக்க வேண்டும் என்பதில் பாரதிராஜா மிகவும் ஆசையாக இருந்தார். நாம் நினைச்சது எல்லாம் நடக்காது. இன்னொரு பெரிய விஷயம் சொல்லட்டுமா? கடவுள் ஒவ்வொருத்தருக்கும் எப்படி எழுதி வெச்சிருப்பான் என்று சொல்கிறேன்.
வாஹினி ஸ்டுடியோவில் அந்த புல்லில் அமர்ந்துக் கொண்டு மதிய வேளையில் டீ சாப்பிட்டபடி சிகப்பு ரோஜாக்கள் கதையை பாரதிராஜா என்னிடம் சொன்னார். ஏண்டா, இந்த காலத்தில் இந்த மாதிரி கதையை எல்லாம் யாரை வைத்து எடுக்க முடியும்? என்றேன். அப்போது கமல்ஹாசன் பெரிய அளவில் முன்னுக்கு வரலே.
சிவாஜி சார்தான் பண்ணனும். நீ யாரு நான் யாரு? நாம போய் கேட்டால் அவர் பண்ணுவாரா? என்றேன். இல்லய்யா, நிச்சயமாக நான் ஒருநாள் இந்த படத்தை எடுத்து காட்டப் போறேன் என்று பாரதிராஜா உறுதியாக சொன்னார். 16 வயதினிலே சிகப்பு ரோஜாக்கள் படம் எல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்பு ரொம்ப அட்வான்ஸ் ஆக பாரதிராஜா யோசித்த படங்கள் என்று எஸ்பி பாலசுப்ரமணியம் அந்த விழாவில் பேசியிருக்கிறார். அந்த விழாவில் பாரதிராஜாவும் முன்வரிசையில் அமர்ந்து எஸ்பிபி பேசுவதை தலையசைத்து ஆமோதித்தபடி கேட்டுக்கொண்டும் இருந்தார்.





