மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை சுவாசிகா. கோரிப்பாளையம் சாட்டை அப்புச்சி கிராமம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த சுவாசிகாவுக்கு ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் பெரிய கவனமும் வரவேற்பும் கிடைக்கவில்லை. அதனால் தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் கேரளாவுக்கே அவர் திரும்பி சென்றார்.
பல ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கிய லப்பர் பந்து படம் மூலம் தமிழ் சினிமாவில் சுவாசிகா ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் வரவேற்பையும் பெற்றுத் தந்த நிலையில் இப்போது தமிழில் பிஸியான ஒரு நடிகையாக சுவாசிகா மாறிவிட்டார்.
லப்பர் பந்து படத்தை தொடர்ந்து நடிகர் சூரியுடன் மாமன் நடிகர் சூர்யாவுடன் கருப்பு உள்ளிட்ட படங்களில் நடித்த சுவாசிகா இப்போது நூறு சாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்த படம் வருகிற 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் சசி, நூறு சாமி படத்தில் சுவாசிகாவுக்கு விருதுகள் குறையும். நடிகை சாவித்திரிக்கு பிறகு அவர்தான் சிறந்த நடிகை என்று மேடைகளில் பேசி வருகிறார்.
நூறு சாமி படம் குறித்து பேசிய நடிகை சுவாசிகா கூறியதாவது, 16 வயசுல சினிமாவில் நடிக்க தொடங்கினேன். தமிழில் சில படங்கள் கதாநாயகியாக நடித்தேன். அப்புறம் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து லப்பர் வந்து படத்துக்கு பிறகு தமிழ் தெலுங்குலேயும் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். அதனால இதை 2வது இன்னிங்ஸ் என்று சொல்லலாம்.
லப்பர் பந்து படம் மூலமாக தான் நூறு சாமி பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னை வைத்துதான் அந்த கேரக்டரையே எழுதியதாக இயக்குனர் சசி கூறிய போது நான் நெகிழ்ந்து போனேன். தாய்க்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு கதை என்றாலும் அதை யார் இயக்குறாங்க அப்படீங்கறதும் முக்கியம். பூ பிச்சைக்காரன் உட்பட சசி இயக்கிய படங்கள் எல்லாமே பார்த்திருக்கிறேன். முதல் முறையாக அவர் கதை சொல்லும்போதே நான் ஓகே சொல்லிவிட்டேன்.
இந்த படத்தில் நான் அம்மா கேரக்டர் பண்றது பார்த்துட்டு நிறைய தெலுங்கு படங்களில் அம்மா கேரக்டர்கள் வந்தது. அம்மா கேரக்டர் எல்லா படத்திலும் இருக்கு. சும்மா காஃபி கொடுத்துட்டு போறது டிஃபன் எடுத்து வைக்கிறது சாப்பிடுங்கன்னு ஃபார்மாலிட்டியா ஒரு வசனம் பேசிட்டு போற மாதிரி கதைகளில் நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு 55 வயதாகும்போது அப்படி நடிக்கிறேன்னு சொல்லிவிட்டேன். நூறு சாமி படத்திலும் அம்மா கேரக்டர் தான். ஆனால் இந்த அம்மா வேற மாதிரி. படம் வரும்போது அது உங்களுக்கே தெரியும் என்று நடிகை சுவாசிகா கூறியிருக்கிறார்.





